‛ஆமா... காப்பி, டீ எந்த பால்ல போடுற... எருமை பால்லயா... பசும்பால்லயா... ஒட்டகப் பால்ல டீ போடுறா... ஒட்டகப்பால்ல டீ போட்றானு எத்தனை தடவடா உன்ட சொல்லிருக்கேன்... துபாய்ல எல்லாம் ஒட்டகப்பால்ல தான் டீ போடுறாங்கன்னு சொல்லிருக்கேன்லடா உன்ட... ’ என , டீக்கடைக்காரரை வடிவேலு பாடாய் படுத்தும் காமெடியை நாம் பார்த்து இன்றும் சிரித்துக் கொண்டிருக்கிறோம். 




உண்மையில் அது மாதிரியான ‛வெளிநாடு ரிட்டன்ஸ்’ பார்டிகள் நிறைய பேர், இன்னும் இப்படி தான் நடவடிக்கையை வெளிப்படுத்துகின்றனர். இப்போது நாம் பார்ப்பவர், இன்னும் கொஞ்சம் ஒருபடி மேலே போய்விட்டார். ஆனால், அவர் செய்த காரியம்... அடேங்கப்பா...!


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்களத்தைச் சேர்ந்த சரவணன். வேலையில்லாமல், சில ஆண்டுகளுக்கு முன், சவுதி அரேபியா சென்றார். அங்கு ஒட்டகம் மேய்க்கு பணியில் இருந்த சரவணன், அதன் பின் ஓரளவிற்கு பணம் சம்பாதித்து சமீபத்தில் இந்தியா திரும்பியுள்ளார். சரி, இருக்கும் பணத்தை வைத்து ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்கலாம் என்று முடிவு செய்த சரவணன், தனக்கு ஒட்டகம் மேய்ப்பதை தவிர வேறு தொழில் தொியாது என்பதால், அதையே செய்யலாம் என முடிவு செய்தார். 




இங்கு எப்படி ஒட்டகம் கிடைக்கும்? வேறு வழியில்லை , ராஜஸ்தான் சென்று, அங்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு ஒட்டகம் ஒன்றை வாங்கினார். உரிய அனுமதி பெற்று, மறவமங்களம் கிராமத்தில் அதை வளர்த்த சரவணன், ஒட்டக பால் கறந்து, தினமும் 1500 ரூபாய்க்கு அதை விற்பனை செய்துள்ளார். ஒட்டகப் பாலுக்கு நல்ல கிராக்கி ஏற்பட, அவருக்கும் நல்ல வருவாய் கிடைத்தது. கொஞ்சம் பேராசை வர, திருமண நிகழ்ச்சிகளில் ஒட்டகத்தை அழைத்துச் சென்று அதன் மூலம் வருவாய் பெற ஆரம்பித்தார். வருவாய் இன்னும் அதிகரித்தது. 


இதற்கிடையில், அந்த கிராமத்தில் காளைகள் வைத்திருக்கும் சிலர், மாட்டு வண்டிகள் மூலம் இரவில் மணல் கடத்தலில் ஈடுபடுவதை சரவணன் அறிந்தார். தன்னிடம் மாடுகள் இல்லை என்றாலும், ஒட்டகம் இருக்கிறதே என்று முடிவு செய்த அவர், ஒட்டக்தை வண்டி ஒன்றில் பூட்டி, இரவில் மணல் கடத்தலில் ஈடுபட்டார். பொதுவாகவே மணலில் ஒட்டகம் வேகமாக செல்லும்; அது அதற்கு பழக்கப்பட்டதும் கூட. எனவே, மாட்டு வண்டிகளை விட, ஒட்டக வண்டியில் சென்ற சரவணன், அதிக மணலை ஏற்றி, விரைவாகவும் அதை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். இது மாட்டு வண்டி வைத்திருந்தவர்களுக்கு ஒரு விதமான எரிச்சலையும் ஏற்படுத்தியது. 




சூர்யவம்சம் படத்தில், ஒரு பாடலில் தேவயானி, கலெக்டர் ஆவது போல... ஓரிரு இரவில் ஒட்டக மணல் கடத்தில் சரவணனுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. கூடவே பிரச்சனையும் வந்தது. இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சாலையில் ஒட்டக வண்டி வருவதை கண்டு அதிர்ந்து போயினர். நிறுத்தி சோதனை செய்த போது, வண்டி முழுக்க ஆற்று மணல். போலீசாருக்கு சென்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்படியே அனைவரையும் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். ஒட்டகத்தை போலீசாரால் நீண்ட நேரம் பராமரிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு சாணம் போட்டு, அந்த இடத்தை நாறடித்தது. 




இதைத் தொடர்ந்து, அதை உரிமையாளர் சரவணனிடம் ஒப்படைத்த போலீசார், ‛தயவு செய்து ஒட்டகத்தை அழைத்துச் செல்லுமாறு’ கூறியுள்ளனர். அதே நேரத்தில் கடத்தப்பட்ட மணல், பயன்படுத்தப்பட்ட வண்டி ஆகியவற்றை காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


துபாயிலிருந்து வந்து துபாயில் பார்த்த வேலையை தான் பார்ப்பேன் என வம்படியாக ஒட்டகம் வாங்கி, பாலைவனத்தில் சுற்றித் திரியும் ஒட்டகத்தை, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய சம்வம் நகைப்புரியதாக மாறியுள்ளது.