தேனி மாவட்டம் கம்பம் அருகே உத்தமபாளையம் கல்லறை தோட்ட தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மகன் மாதவன் (வயது 16). ராயப்பன்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மாதவன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவனின் பெற்றோர் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை தேடி வந்தனர். இதற்கிடையே கடந்த 20-ந்தேதி அங்குள்ள கல்லறைத் தோட்டத்தின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.




தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கிணற்றில் பிணமாக மிதந்தவரின் உடலை மீட்டனர். அது காணாமல் போன பள்ளி மாணவர் மாதவன் என்பது தெரியவந்தது. அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். மாதவன் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.




அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவர் காணாமல் போன தினத்தில் அவருடன் செல்போனில் பேசியவர்களின் பட்டியலை போலீசார் சேகரித்தனர். அதில் அவருடைய நண்பர்களான 17 வயது சிறுவர்கள் 2 பேர் மற்றும் மதுரை செல்லூரை சேர்ந்த அல்லா பிச்சை (23) ஆகிய 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.




இதையடுத்து அவர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவா்கள் 3 பேரும் மாதவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, அல்லா பிச்சை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவா்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனா். அதில் கடந்த 18-ந் தேதி சாப்பாடு வாங்குவதற்கு மாதவனிடம் ரூ.1,000 கொடுத்துள்ளனர். அதன்படி அவர் சாப்பாடு வாங்கி வந்து கொடுத்துள்ளார். கிணற்றுக்கு அருகே அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர். அப்போது சாப்பாடு வாங்கியது குறித்து மாதவனுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மாதவனை அவர்கள் தாக்கி, கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண