சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ள அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, கள ஆய்வாளர், கா.சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து கா.காளிராசா..,” கல்லலை அடுத்துள்ள அரண்மனை சிறுவயல் நீர் நிலைகளும், வயல்வெளிகளும் நிறைந்த ஊராகும். இங்குள்ள மும்முடிஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும், மேலும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் அரண்மனை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள சீனக்கண்மாயில் கலுங்குமடையில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனக்கண்மாய்.
அரண்மனை சிறுவயலிலிருந்து களத்தி அய்யனார் கோவிலுக்குச் செல்லும் வழியில் தொடர்வண்டிப் பாதையை ஒட்டிய ஒரு பகுதியில் சீனக் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயின் நடுவில் காணப்படும் குமிழி மடைத் தூண்களைக் கொண்டு இது பழமையான கண்மாய் என்பதை அறிய முடிகிறது.
அரண்மனை சிறுவயல் ஜமீன்தார்.
சிவகங்கைச் சீமை இராமநாதபுரத்தில் இருந்து 1729 இல் பிரிக்கப் பெற்று சசிவர்ணதேவர் அவர்களால் 1730 இல் தெப்பக்குளம், அரண்மனை மற்றும் நகரம், உருவாக்கி முறையான அமைப்பாக ஆளப்பெற்றது. 3.09.1801ல் இருந்து இஸ்திமிரிங் ஜமீன்தாராக கௌரி வல்லவருக்கு அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் முடி சூட்டப் பெற்று, அன்று முதல் ஜமீன்தாரி முறைக்கு சிவகங்கை வந்தது. கௌரி வல்லவர் அறந்தாங்கி காட்டில் வாழ்ந்த போது மாணிக்க ஆத்தாள் என்பவரை விரும்பி மணந்தார். இவர் வேறு சமூகத்தை சார்ந்தவர். அவர் வழிவந்த வாரிசுகளே தற்போது சிறுவயல் ஜமீன்தராக இருந்து வருகின்றனர். இங்கிருந்த முத்துராமலிங்க ஜமீன்தார் பற்றி தமிழ்த் தாத்தா உ.வே.சா என் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர்களது வாரிசுதாரர்கள் இன்றும் காளையார்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஐந்தாம் மண்டகப் படியை நடத்திவருவதோடு, காளையார் கோவில் தேரோட்டம், மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். கல்லல் சிவன் கோவிலிலும் எட்டாம் திருநாள் மண்டகப்படி இவர்களுடையதாக உள்ளது. இவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது மிகவும் இடிந்த நிலையில் இருந்தாலும் அதில் ஒரு பகுதியில் வேல், வாள், கம்பு, வளரி போன்ற ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கல்வெட்டு அமைப்பு.
சீனக் கண்மாயில் நீர் நிறைந்து வெளியேறும் கலுங்கு மடை கரைப்பகுதிகள் செம்புராங்கல்லாலும்.. நீர் வெளியேறும் இடங்கள் வெள்ளைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. இதில் கரையை ஒட்டியுள்ள கட்டுமான பகுதியில் சுமார் 2.5 அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் உடையதாகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுச் செய்தி.
உ- 1876 ஆம் வருஷம் மே மாதம் எட்டாம் தேதி தாது வருஷம் சித்திரை மாதம் 28ஆம் தேதி சிவ- சப்-கட்டணூர் ஜமீன்தார் முத்து வடுகு முத்துராமலிங்க தேவர் வர்கள். என்று எழுதப்பட்டுள்ளது சிவ - சப் என்பது சிவகங்கை சார்பு என பொருள் படுவதாகக் கொள்ளலாம். கண்மாய்க் கல்வெட்டின் வழி கண்மாயை முத்து வடுகு என்ற முத்துராமலிங்க ஜமீன்தார் அவர்கள் கண்மாய், மற்றும் கலுங்கை சீர் செய்தமையை அறிய முடிகிறது.
தாது பஞ்சம் காலம்.
1876 ஆம் ஆண்டு தொடங்கி 1878 வரை தாது பஞ்ச காலம் என்று சொன்னாலும் இதற்கு முன்னும் பின்னும் சேர்த்து ஏழு ஆண்டுகள் மழை இல்லாமல் மிகுந்த வறட்சியாக இருந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர். இந்த தாது பஞ்சம், மிகப்பெரிய பஞ்சமாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் பட்டினியால் இலட்சக்கணக்கில் இறந்ததாகவும் தெரிகிறது. இதை சென்னை மாகாணப் பஞ்சம் என்றும் அழைக்கின்றனர். சென்னை மட்டுமல்லாது கர்நாடகா மகாராஷ்டிரா வரை இப் பஞ்சம் பரவி இருந்ததாக கூறப்படுகிறது. தாது பஞ்சம் பற்றி பல இலக்கியங்கள் குறிப்பிட்டாலும் சிவகங்கை பகுதியில் கண்மாய்களை தூர்வாரி பராமரிப்பு பணியை செய்து இருப்பதன் மூலம் அடுத்த மழைக்கு தயாராக இருந்ததை அறிய முடிகிறது.
பஞ்ச லட்சண திருமுக விலாசம்.
சென்னை மாகாண தாது பஞ்சத்தை கருப்பொருளாகக் கொண்டு சிவகங்கை அரசவை புலவரும், மிராசு கணக்காளருமான பிரமனூர் வில்லியப்பப் பிள்ளை பாடிய எள்ளல் சுவை மிகுந்த நூல் பஞ்சலட்சன திருமுக விலாசம் ஆகும். இந்நூலில் மதுரை சொக்கநாதரிடம் பஞ்சத்தின் பாட்டை மக்கள் முறையிட, அவரோ சிவகங்கை ஜமீன்தார் துரைசிங்கம் அவர்களிடம் முறையிட அனுப்பி வைத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி சிவகங்கை தாது பஞ்ச நேரத்தில் ஓரளவு செழிப்பாக இருந்ததாகவும் கருத முடிகிறது. சிவகங்கை தொல்நடைக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னர், தாது பஞ்ச காலத்தில் இலங்கையில் தொழில் செய்த தனிநபர் ஒருவர், குளம் மற்றும் வரத்துக் காலை சீர் செய்து உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிய கல்வெட்டை சிவகங்கை அருகே உள்ள இடைய மேலூரில் கண்டுபிடித்தது, குறிப்பிடத்தக்கது.