சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பயிற்சிகளும், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமாக்கல் திட்டமானது, மகளிருக்கான சிறப்பு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, அரசு ஆணை எண் 51, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நாள்-25.08.2025–ல் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை வங்கிகடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.
திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்
குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற விரும்பும் மகளிர்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்ப அடையாள அட்டை பெற்றவராகவும், 18 முதல்55 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். கல்வி தகுதி தேவையில்லை. அதிக பட்சமாக ரூ.10,00,000- வரை திட்ட மதிப்பீட்டில் 25% மானியத்துடன், ரூ.2,00,000- (அதிகபட்சமாக) வரை வங்கி கடனுதவி வழங்கப்படும். மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான தயாரிப்புகள், ஊட்டசத்து நிரம்பிய உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்க கடனுதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.
இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அவ்வாறாக பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தலைமையிலான குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். குறிப்பிட்டுள்ள திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். எனவே, தகுதி வாய்ந்த மகளிர் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமாக்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.