மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, இலந்தங்குடிபட்டி கண்மாய் பகுதியில் தொடங்கி வைத்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தங்குடிபட்டி கண்மாய் பகுதியில், இன்றையதினம் (21.11.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தொடங்கி வைத்து தெரிவிக்கையில்..“கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திடவும், கிராமப்புற மக்களுக்கு மீன் புரதச்சத்து எளிதில் கிடைத்திடவும் வழிவகை செய்திட ஏதுவாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தினை செயல்படுத்திட சிவகங்கை மாவட்டத்திற்கு 120-ஹெக்டேர் பரப்பளவில் 1-ஹெக்டேருக்கு 2,000-எண்ணம் வீதம் மொத்தம் 2.40-இலட்சம் எண்ணம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்ய 2025-26 ம் ஆண்டிற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் துவக்கமாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தின் கீழ்,
இலந்தகுடிபட்டி கண்மாயில் மீன்குஞ்சுகள்
இன்றையதினம் (21.11.2025) சிவகங்கை ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தகுடிபட்டி கண்மாயில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் இத்திட்டமானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, துறை ரீதியாக இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி மீன் குஞ்சுகளை முறையாக பராமரித்து, அதற்கென குறிப்பிட்டுள்ள பகுதிகளை சரிவர தேர்வு செய்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் திரு.தி.சண்முகம், மீன்வள ஆய்வாளர் பா.கோமதி, மீன்வளத்துறை அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி சக்தி மீனாட்சி, ஊராட்சி செயலர் முத்துக்குமார், சுகாதார கள ஊக்குநர் திருமதி உமா மகேஸ்வரி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.