சிவகங்கை மாவட்டம் நேரு பஜார் பகுதியில் அரசு டாஸ்மாக் மற்றும் தனியார் ஏசி பார் இயங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் நிலவுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு சென்று வந்த போதை ஆசாமி ஒருவர் முசாபர் கனி என்ற 40 வயதுடைய நபரை விபத்துக்குள்ளாக்கி சென்றுவிட்டார். இதையடுத்து காயமடைந்த முசாபர் கனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் போராட்டமாக வெடிக்க டாஸ்மாக் கடையை அதிகாரிகள் தற்காலிகமாக மூடினர்.



ஆனால் நேரு பஜாரில்  செவன் ஸ்டார் என்ற பெயரில் இயங்கும் ஏ.சி., பார் விதிகளை காற்றில் பறக்கவிட்டு இயங்குவதாக பல்வேறு புகார்கள் வாசிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தனியார் ஏ.சி., பாரையும், டாஸ்மாக் கடையையும் நிரந்தரமாக மூட வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அதிகாரிகள் டாஸ்மாக் கடைக்கு மட்டும் பெரிய பூட்டாக போட்டவர்கள் தனியார் பார் பிரச்னை தங்கள் பார்வைக்கே வராதது போல் சுதந்திரம் கொடுத்தனர். இதையடுத்து அ.தி.மு.க., சிவகங்கை நகரச்செயலாளர் என்.எம் ராஜா பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தனியார் பாரை முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து தனியார் பாரை திறக்க மாட்டோம் என கலால் அதிகாரிகள் தெரிவித்த பின் கலைந்து சென்றனர். இந்நிலையில் முன்பக்கம் இயங்கிய பாரை பின் வாசல் வழியாக கடையை இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



 

 

இது குறித்து அ.தி.மு.க., நகர் செயலாளர் என்.எம்.ராஜா நம்மிடம் ...," நேரு பஜாரில் டாஸ்மாக் கடையும் தனியார் ஏ.சி.,பாரும் இயங்கி வந்தநிலையில் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஆனால் தனியார் பாரை மூடுவதற்கு முயற்சிக்காமல் அதிகாரிகள் பொறுப்பற்று பதில் தெரிவித்தனர். இதையடுத்து கடையை தற்காலிகமாக மூடியுள்ளனர். சம்மந்தப்பட்ட ஏ.சி., பாரில் ஏற்கனவே அடிதடி தகராறு உள்ளது. இதனால் சம்மந்தப்பட்ட பாரை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தும் கூட அதை உடனடியாக திறந்து செயல்படுத்தி வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடை மற்றும் தனியார் பாரை  நிரந்தரமாக மூடி வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

 



இது குறித்து கலால் உதவி ஆணையார் ரத்னவேலை தொடர்பு கொண்டு பேசுகையில்..," இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான கடை ஒரு வாரத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். ஆனால் அந்த மதுபான கடையில் உரிமையாளர் பெயர் மற்றும் அதனைப் பற்றிய தகவல் தர முடியாது என மறுத்துவிட்டார்.

 

சிவகங்கை நேரு பஜாரில் இயங்கும் ஏ.சி., பார் பல்வேறு விதிகளை மீறி செயல்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் சிலர் இதற்கு ஆதரவாக துணை போவதாகவும். அதற்கு கட்டுக்கட்டாக பணமாகவும், ஜி.பே., போன்பே போன்ற ஆன்லை மூலமும் பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பிரச்னையில் தலையிட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.