மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கடைக்காரர்கள் சங்க தலைவர் ராஜூநாகுலு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," 13ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்து மீனாட்சியம்மன் கோயிலுக்குள் கடை வைத்துள்ளோம். கடந்த 2.2.2018ல் கிழக்கு கோபுரம் பகுதியில் வீரவசந்தராயர் மண்டப பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் தீயில் எரிந்தன. இதையடுத்து கடைகளை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்துள்ளனர். எங்களின் வாழ்வாதாரததை பாதுகாத்திட மாற்று இடம் வழங்கவில்லை. பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன.

 



 

இந்த கடைகளுக்கான ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் நடக்கவுள்ளது. இங்குள்ள கடைகளில் எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், அதுவரை இந்த டெண்டருக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை  விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் மல்டி லெவல் பார்க்கிங்கில்  கடைகளுக்கான டெண்டர் நடத்தலாம். அந்த டெண்டரில் ஏற்கனவே கோவிலில் கடை வைத்திருந்தவர்கள் பங்கேற்கலாம். டெண்டர் குறித்த இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.







 








 


தமிழ்நாட்டில் கட்டிட அனுமதி மற்றும் கட்டிட வரைபட அனுமதி வழங்க ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் முறையான தகுதியான நபர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அனுமதி பெற்றிடும் வகையில் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க கோரிய வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கட்டிட அனுமதி மற்றும் கட்டிட வரைபட அனுமதிக்கான தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள்-2019ன் படி மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், கட்டிட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், கட்டமைப்பு பொறியாளர்கள், அபிவிருத்தியாளர் உள்ளிட்ட தொழில் முறை சார்ந்த வல்லுநர்களை ஆண்டுதோறும் அல்லது 3 வருடத்திற்கு ஒருமுறை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் செய்ய வேண்டும். இதற்காக செயற்பொறியாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோரை கொண்ட ஸ்கிரீனிங் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டியிடம் சான்று பெற்றவர்கள் மட்டும் பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஊராட்சி, பேரூராட்சி பகுதி கட்டிட அனுமதி மற்றும் வரைபட அனுமதி தொடர்பாக விதிகள் இல்லாததால் தகுதியில்லாத பலர் கட்டிட வரைபட அனுமதி பெறுகின்றனர்.

 

எனவே, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் முறையான தகுதியான நபர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அனுமதி பெற்றிடும் வகையில் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.