திருச்சியை சேர்ந்த கண்ணையன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  அதில், "திருச்சி மலைக்கோட்டை பகுதியில் சுமார் 500 நாய்கள் சுற்றித் திரிகின்றன. சில நேரங்களில் தெரு நாய்கள் கடிக்கவும் செய்கின்றன. தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடாத காரணத்தால், அவற்றால் கடிக்கப்படும், பொதுமக்களும் ரேபிஸ் நோய்க்கு ஆளாகின்றனர். தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.


தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழக்கும்  நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே கண்காணிப்பு குழுவின் கீழ் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தவும் கருத்தடை செய்யவும் தெரு நாய்களுக்கு தேவையான தங்குமிடம் குடிநீர் மற்றும் உணவு வசதிகளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.திருச்சி மாநகராட்சி தரப்பில், "2021 ஆகஸ்ட் மாதம் முதல் 824 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக கால்நடைத்துறை செயலர் மற்றும் திருச்சி மாநகராட்சி பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.




கும்பகோணம் மகாமகம் குளத்தின் நீர் அளவு குறைக்கப்பட்டது ஏன் - மதுரை உயர்நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் விளக்கம் 


தஞ்சையைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கும்பகோணத்தில் மகாமகம் குளம் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மாசிமகம் திருவிழா கொண்டாடப்படும். அந்நேரத்தில் அக்குளத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் முங்கி எழுவர். அதேபோல 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் கும்பமேளா நிகழ்வும் நடத்தப்படும். 


அந்த மகாமகம் நிகழ்வின் போதே பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு முன்பாக 16 புனித தீர்த்தங்களில் குளித்து கோவிலுக்கு செல்வர். இந்நிலையில் மகாமக குளத்தை தூர்வார இந்த ஆண்டும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மகாமகம் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே தண்ணீர் வெளியேற்றப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது மகாமகம் குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது நம்பிக்கைகளுக்கு எதிரானது. ஆகவே கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவில் மகாமகம் குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கோவில் தரப்பில், மாசி மகாமகம் தினத்தன்று 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பக்தர்கள் குளத்திற்கு வருவதால் பாதுகாப்பு கருதி தண்ணீரின் அளவு குறைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.