திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மலையப்பன்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் சாமிதுரை (31) கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இதே பகுதியில் மருது பால் சாகிப் (34) என்பவரும் வசித்து வரும் நிலையில், அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் செய்த பெண் வீட்டாரிடம் மருது பால் சாகிப் நல்லவர் இல்லை என்றும் அவருக்கு பெண் கொடுக்க வேண்டாம் என்றும் சாமிதுரை ஏற்கெனவே கூறியிருந்தது மருதுபால் சாகிப்புக்கு தெரிய வந்தது.

  



இதன் காரணமாக சாமிதுரை குடும்பத்துக்கும், மருது பால் சாகிப் குடும்பத்துக்கும் இடையே கடந்த 3 நாட்களாக பிரச்சினை இருந்து வந்த நிலையில், இருதரப்பினரும் வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக சாமிதுரை, மருது பால் சாகிப் தரப்பில் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இருதரப்பினரையும் விசாரணைக்காக போலீசார் நேற்று அழைத்திருந்தனர். அதன்படி போலீஸ் நிலையத்துக்கு செல்வதாக கூறி, சாமிதுரை நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே வந்தார். பின்னர் வரும் வழியில், வத்தலக்குண்டு-மதுரை சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள பேக்கரி கடைக்கு சாமிதுரை சென்றார்.


அப்போது திடீரென மருது பால் சாகிப் மற்றும் அவருடைய நண்பர் உதயகுமார் (22) ஆகியோர் அந்த பேக்கரி கடைக்குள் திடீரென புகுந்து பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் 2 பேரும் சேர்ந்து சாமிதுரையை அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர். இதனை சற்றும் எதிர்பாராத சாமிதுரை உயிர் தப்பிக்க பேக்கரியில் இருந்து வெளியே ஓடினார். அவரை ஓட, ஓட விரட்டி மருது பால் சாகிபும், உதயகுமாரும் சரமாரியாக வெட்டினர். ஒரு கட்டத்தில் அரிவாள் வெட்டில் நிலைகுலைந்து போன சாமிதுரை பேக்கரி கடை முன்பு சுருண்டு விழுந்தார். இருப்பினும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து சாமிதுரையை அரிவாள்களால் தலையில் வெட்டி வீழ்த்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாமிதுரை துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். 



பட்டப்பகலில் நெஞ்சை பதை பதைக்க செய்யும் வகையில் நடந்த இந்த கொலை சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் பேக்கரி கடை ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சாமிதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருது பால் சாகிப், உதயகுமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.   கொலை சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சாமிதுரையை 2 பேரும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண