அரசியல் இயக்கத்தில் மதம் கலக்கக்கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள்.

 

செல்லூர் கே.ராஜூ மதுரையில் செய்தியாளர் சந்திப்பு

 

மதுரை பழங்காநத்தம் அருகே முத்துப்பட்டியில் அங்கன்வாடி கட்டிட பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர், மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “எஸ்.பி.ஐ., வங்கி தேர்தல் பத்திர விபரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது போல தெரிகிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் பயபப்படுவது காங்கிரஸ், தி.மு.க., தான், நாங்கள் இல்லை. எங்களுக்கு கவலை இல்லை. தி.மு.க., கூட்டணியில் எத்தனை கட்சி சேர்ந்தாலும் மக்கள் அவர்களை ஏற்கப்போவதில்லை. அ.தி.மு.க., கூட்டணிக்கு வாங்க என நாங்கள் யாரையும் கூப்பிடவில்லை. பா.ஜ.கவையே வேண்டாம் என்று சொன்னவர்கள் நாங்கள். 

 

வாயில் வடை சுடுகின்றனர்

 

வாயிலேயே வடை சுடுவதில் இந்திய அளவில் மோடியும், தமிழகத்தில் ஸ்டாலினும் முதலிடத்தில் உள்ளனர். நீங்கள் நலமா என புதிதாக பெயர் வைத்து ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின். பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். 

 

மோடி கஜினி முகமது போல

 

கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி மக்கள் ஏற்க மாட்டார்கள். அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ராமர் கோவில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது.  பா.ஜ.க., எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான்" என்றார்