அண்ணன், தம்பி சண்டைகள் சரியாவது போல அ.தி.மு.க.,வில் நிலவும் பிரச்னைகளும் சரியாகி விடும் என மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.

 

செல்லூர் ராஜூ மனு

 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அ.தி.மு.க., மாமன்ற உறுப்பினர்களோடு மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் மனு அளித்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில் "மதுரை மாநகராட்சிக்கு குப்பை மாநகராட்சியாக உள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் உள்ளதோ இல்லையோ, ஊழல்கள் அதிகரித்து உள்ளது, வீடு கட்டுவதற்கு கட்டட வரைபட அனுமதி வாங்கி விட்டு வணிக வளாகம் கட்டப்படுகிறது. விதிமுறைகள் தளர்த்தி மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தை விட உயரமாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

 

ரோடு சோ நடத்தியவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

 

முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் ஆமையை விட குறைவாக நடைபெறுகிறது. 6 மாநகராட்சி ஆணையர்கள் மாறி விட்டனர், ஆனால் நாங்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை, அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. இத்திட்டத்தை ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிச்சாமியும் கொண்டு வந்தனர், திட்டத்தை கொண்டு வந்ததற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் மக்கள், விவசாயிகள் தன்னெழுச்சியாக பங்கேற்றனர். பாராட்டு விழாவில் நாங்கள் யாரையும் காசு கொடுத்து நலத்திட்டம் கொடுத்து அழைத்து வரவில்லை. முதலமைச்சர் ஊர் ஊராக சென்று ரோட் சோ நடத்துகிறார். ரோடு சோ நடத்தியவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. வைகோ, வாஜ்பாய், அத்வானி உள்ளிடோர் ரோடு சோ நடத்தி வெற்றி காணவில்லை.

 

சின்னத்தை முடக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை

 

பாலியல் தொல்லை அளித்ததாக காவல்துறை இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வேலியே பயிரை மேயும் நிகல்வெல்லாம் திமுக ஆட்சியில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதலமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார். என தெரியவில்லை, முதலமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை, தவெக தலைவர் விஜய் தான் சாட்டை சுழற்றுவது போல தெரிகிறது. இரட்டை இலை சின்னத்தை யாராலும் மூடக்க முடியாது. 2 அணியாக அதிமுக இருந்த போது சின்னம் முடக்கப்பட்டது. சின்னத்தை முடக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி நல்லதை செய்வார் அதனால் அவர் பின்னால் நிற்கிறோம்.

 

பிரிச்னை சரியாகிவிடும்

 

2026-ல் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி அமைக்க விருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கை குறைப்பதற்காக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. செங்கோட்டையன் கேட்காமல் காவல்துறை எதற்காக பாதுகாப்பு அளித்துள்ளது. திமுக பயத்தின் காரணமாக செங்கோட்டையனுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது. உறுதியாக, இறுதியாக சொல்கிறேன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றியடைந்து ஆட்சி அமைக்கும். அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு மற்ற கட்சிகளை குறை சொல்ல விரும்பவில்லை. காவல்துறையை சுதந்திரமாக விட்டால் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வரலாம், குடும்பத்தில் அண்ணன், தம்பிக்குள் நடைபெறும் சண்டை போல அதிமுகவில் பிரச்னை நிலவுகிறது, அண்ணன், தம்பி சண்டைகள் சரியாவது போல அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளும் சரியாகி விடும்" எனக் கூறினார்.