நான்கு வழிச்சாலையில் பிஸ்கட் கம்பெனியை கடக்கும் போதெல்லாம் அந்த வாசனை ஈர்க்கும். பிஸ்கட் கம்பெனி வந்துருச்சா என பேருந்தில் தூங்கிய பயணிகளுக்கெல்லாம் நினைவூட்டும். அப்படி மனமும், சுவையும் நிறைந்த பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. மதுரை நகரி பகுதியில் செயல்படும் பிரிட்டானியா பல்வேறு நல்ல விசயங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதில் பெண்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கூடுதல் சதவீதம் பெண் பணியாளர்களை அமர்த்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

 



இந்தியாவின் மிகப்பெரிய பேக்கரி ஃபுட்ஸ் நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதன் மதுரை உற்பத்தி தொழிற்சாலையில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 1400-க்கும் பணிபுரிகின்றனர், அதில் 65% பேர் பெண்கள். பிரிட்டானியா மேற்பட்டோர் அதன் மனிதவளத்தில் பெண்களின் பங்கெடுப்பை அதிகரிப்பதன் மூலம், தேசிய அளவில், 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள், தற்போது 38% சதவீதமாக இருக்கும் மொத்த பன்முகத்தன்மை விகிதத்தை 50% சதவீதமாக உயர்த்தும் நோக்கினைக் கொண்டுள்ளது.




தலைமை உற்பத்தி அதிகாரி இந்திரானில் குப்தா, ஆன்லைனில்  வாயிலாக கூறுகையில்..," மதுரையில் உள்ள எங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் இன்ஜினியரிங், உற்பத்தி மற்றும் கிரைண்டிங், அரைத்தல், பேக்கிங், தூய்மை பணிகள், பேண்ட்ரி, சேமிப்பு கிடங்கு பராமரிப்பு, ஆய்வுக்கூட பரிசோதனைகள், உணவகம் மற்றும் தொழிற்சாலை வளாகப் பாதுகாப்பு என பல்வேறு பணிகளில் பெண்கள்  பணிபுரிகின்றனர். பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளித்ததால் ஆலையின் செயல்திறன் அதிகரித்து, அதன் செயல்பாடுகளுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 




 இதனால் அவர்கள், ஊழியர்களிடம் ஆலை நமக்கான இடம் என்கிற உணர்வை அளித்ததுடன், பணி விலகல்களை குறைக்கவும் உதவியது. பன்முகத்தன்மையை அதிகரிக்க நாங்கள் மேற்கொள்ளும் முன்முயற்சிகள் மூலம், 'சில பணிகளுக்கு ஒரு பாலினத்தவர் மட்டுமே பொருந்துவார்கள்' என்கிற பிற்போக்கான சிந்தனைக்கு எதிராக நாங்கள் சவால் விடுக்கிறோம்; அதே நேரத்தில் வரவேற்கத்தக்க மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை விரிவுபடுத்துவது, மற்றும் பணிக்கு வரும் தனிநபர்களிடம் ஆலை நமக்கான இடம் என்கிற உணர்வை வளர்ப்பதும் எங்கள் நோக்கமாகும்," என்று கூறினார்.




 

மதுரை பிரிட்டானியா நிறுவனம், தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமத்து பெண்களுக்கு அதிகப்படியாக வேலையை வழங்கியுள்ளனர். அவர்கள் பணிக்காக நிறுவனத்திற்கு நுழையும்போதே மனரீதியான பாதிப்பு இல்லாமல் பணி செய்ய வேண்டும் என  சில பயிற்சிகளையும் வழங்குகின்றனர். தூய்மை, சத்தான உணவு என எல்லா விசயத்தை பார்த்து பார்த்து செய்வதால் முன்னேற்ற பாதைக்கு உதவியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.



 

பிஸ்கட் தயாரிப்பை கண்காணித்துக் கொண்டிருந்த யூனிட் ஹெட் சுரேஷ் நம்மிடம், “நகரி பகுதியில் கடந்த 2011-ல் பிரிட்டானியா நிறுவனம் 2 லைனில் ஆரம்பித்தோம். தற்போது 5 லைனில் நிறுவனத்தில் உறுவெடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்வதற்கு மதுரை பிரிட்டானியா நிறுவனம் பெரிதும் உதவியாக இருக்கிறது. தற்போது 1400 ஊழியர்கள் நேரடியாக பணி செய்கின்றனர். தற்போது 65% பெண்கள் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் பெண் பணியாளர்களின் சதவிகிதம் அதிகரிக்க உள்ளது. இங்கு மூன்று ஷிப்டு பணி நடைபெறுகிறது. அதனால் அவர்கள் வீட்டில் இருந்து நிறுவனத்திற்கும் - நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு பஸ் வசதி ஏற்பாடு செய்வதால் பாதுகாப்பாக உணர்கின்றனர். அதனால் இங்கு அதிகளவு பெண் வேலை செய்ய முடிகிறது" என தெரிவித்தனர்.



மேலும் ஹெச்.ஆர் மேனேஜர் சாருமதி நம்மிடம், “எங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் பெண்களுக்கு பயிற்சி, விழிப்புணர்வு, சமூகம் சார்ந்த விஷயங்கள் என வேலையுடன் கூடிய அடிப்படை விசயங்களை கற்றுக் கொடுக்கிறோம். அதனால் சுய நம்பிக்கை அவர்களுக்கு அதிகளவு இருக்கிறது. உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் ஆரோக்கியமாக உணர வைத்துள்ளோம். அதனால் எங்களால் பெண் ஊழியர்கள் சதவீதத்தை உயர்த்திக்கொண்டே செல்ல முடிகிறது" என்றார்.