தேனியில் மலையடிவாரத்தில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி மாவட்டம் வருச நாடு மலைப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. 75 கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Continues below advertisement
தேனி மாவட்டம் வருசநாடு அருகே பண்டாரவூத்து வனப்பகுதியில் சிலர், மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் தலைமையில், கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான போலிசார் நேற்று பண்டாரவூத்து வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

 
அப்போது வனப்பகுதியில் பளியன்பாறை என்ற இடத்தில் முட்புதரில் 3 சாக்கு மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட போலீசார், அந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது ஒவ்வொரு சாக்கு மூட்டையிலும் தலா 25 கிலோ வீதம் மொத்தம் 75 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை பதுக்கி வைத்தவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். 

 
இந்த விசாரணையில் கஞ்சா பதுக்கி வைத்தது மதுரை மாவட்டம் காளப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த உதயன் (34), பண்டாரவூத்தை சேர்ந்த ஜோதிபாசு (33) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருசநாடு பகுதியில் சுற்றித்திரிந்த அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை வருசநாடு காவல் நிலையத்தில் வைத்து  விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா பதுக்கியதில் உசிலம்பட்டியை சேர்ந்த விஜி, காளப்பன்பட்டியை சேர்ந்த செல்வேந்திரன் ஆகிய 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அந்த 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 
இதற்கிடையே கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது தொடர்பாக இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி அல்லிநகரம் பகுதியில் விற்பனைக்காக 23 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக  பெரியகுளம் கைலாசப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (22), ராம்குமார் (25) இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக பலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதும்,  கஞ்சா விற்பனையாளர்களை பிடித்து  போலிசார் வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement

யூடியூப்பில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola