பழனி அருகே உள்ள அக்கவநாயக்கன் புதூர் அருகில் உள்ள செங்கழனி அம்மன் கோவில் வளாகத்தில் இரண்டு பழமையான அரிகண்ட கல் காணப்பட்டது. இது தொடர்பாக பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களும் , தொல்லியல் ஆய்வாளர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.
பழனியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அக்கமநாயக்கன் புதூரில் செங்கழனி அம்மன் கோயில் உள்ளது . இதன் வளாகத்தில் இரண்டு அரிகண்ட கல் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் கூறியதாவது, “எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் போது தன் நாட்டுப் படைகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் ஊரை காப்பாற்றுவதற்காகவும் தன் நாட்டு அரசன் உடல்நலமில்லாமல் இருக்கும் பொழுது அவன் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காகவும் மற்றும் சில காரணங்களுக்காக தன்னுடைய தலையை வெட்டி கொற்றவைக்குப் பலி கொடுத்து உயிர் தியாகம் செய்யும் வீரனுக்கு அரிகண்ட சிற்பங்கள் செய்து வழிபடுவது வழக்கம். சோழ சாம்ராஜ்யத்தில் வேளக்காரப் படைகளும் பாண்டிய ஆபத்துதவிகளும் தனது அரசன் உயிரிழந்ததற்காக தலையை அறுத்து அரிகண்டம் கொடுத்த செய்திகள் கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியங்களிலும் பதியப்பட்டிருக்கிறது.
சிற்பத்தின் அமைப்பு முதல் சிற்பம் 45 சென்டிமீட்டர் உயரமும் 30 சென்டி மீட்டர் அகலமும் உள்ள கரணைக்கல் வடிவிலான கிரானைட் வகை கல்லில் 25 சென்டி மீட்டர் உயரமும் 20 சென்டிமீட்டர் அகலமும் உள்ள அரிகண்ட சிலை புடைப்புச் சிற்பமாக ஐந்து சென்டி மீட்டர் ஆழத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது சிற்பம் 35 சென்டிமீட்டர் உயரமும் 25 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது கல்லில் 5 சென்டி மீட்டர் ஆழத்துக்கு புடைப்புச் சிற்பமாக 20 சென்டி மீட்டர் அகலத்திற்கு 25 சென்டி மீட்டர் உயரத்திற்கும் அரி கண்ட சிற்பம் செதுக்கப்பட்டு இருக்கிறது . இதன் அமைப்பை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள அரிகண்ட சிற்பங்களில் சிறியது இதுவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஆய்வாளர்கள் மேலும் கூறியதாவது சிற்ப அமைதியையும் ஒழுங்கற்ற கரணைகல் வடிவிலான புடைப்பு சிற்பத்தின் உருவ அமைப்பையும் வைத்துப் பார்க்கும்பொழுது இந்த சிற்பங்கள் கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கவேண்டும் சிற்பங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் காற்று மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளது . இந்த அரிகண்ட சிற்பங்கள் செங்கழனி அம்மன் கோயிலை சேர்ந்தவையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் அருகில் உள்ள அழிந்துபோன மிகப் பழமையான தற்போது புதுப்பிக்கப்பட்ட சிவன் கோயிலில் இருந்து கால ஓட்டத்தில் இங்கு கொண்டு வரப்பட்டு செங்கழனி அம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர் கூறினார்.
வீர தீர செயல் புரிந்தவர்களின் அடையாளமாகவே அரிகண்ட சிற்பங்கள் கருதப்படுகின்றன பண்டைய கால வரலாற்றைக் காட்டும் முக்கிய ஆவணங்களாக இந்த சிற்பங்கள் விளங்குகின்றன. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.