ராமநாதபுரம் மாவட்டம் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை உள்ளிட்ட பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதுதவிர கடல் புற்கள், கடல்பாசி, கடல் தாமரை, தாழை செடி உள்ளிட்ட பல இயற்கை தாவரங்களும் கடலில் இயற்கையாகவே வளர்ந்துள்ளன. இந்தநிலையில் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக கடல் கொந்தளிப்பாக இருப்பதுடன் கடல் நீரோட்டமும் வேகமாக உள்ளது. கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் நீரோட்ட வேகத்தால் கடலில் இயற்கையாகவே வளர்ந்து நிற்கும் கடல் புற்கள், தாழை செடி, பாசி உள்ளிட்ட பல இயற்கை தாவரங்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரை ஒதுங்கி கிடக்கின்றன.
ஒரு சில இடங்களில் மலைபோல் கடல் புல் கரை ஒதுங்கி குவிந்து கிடக்கிறது. கடலில் உள்ள கடல் புல்லை கடலில் வாழும் அரிய வகை உயிரினமான கடல் பசு மட்டுமே விரும்பி உண்ணுவதுடன் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் புல்லின் வளர்ச்சியும் குறைந்து வரும் நிலையில் தற்போது டன் கணக்கில் கடல் புற்கள் கடல் கொந்தளிப்பால் ஆற்றங்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடப்பது வனஉயிரின ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கடலுக்கு அடியில் நீரோட்ட வேகம் அதிகரித்துள்ளதால் கடற்புற்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்குகிறது. கடலுக்கு அடியில் வாழும் தாவரங்களில் கடற்புற்கள் ஆழமற்ற இடங்கள், நதி முகத்துவாரங்களில் வளரும். இந்தியாவில் தென் கிழக்குப்பகுதிகளான மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி, அரபிக்கடலில் லட்சத்தீவிலும், வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன.
மன்னார் வளைகுடாவில் 14 வகையான கடற்புற்கள் உள்ளன. இவை கடலோரம் 15 மீட்டர் ஆழம் வரை காணப்படுகின்றன. 2 முதல் 2.5 மீட்டர் ஆழம் வரை அடர்த்தியாகவும், உயரமாகவும் வளர்கின்றன. மணல் பரப்பு அதிகமாக உள்ள கடற்பகுதியில் செழிப்பாக வளரும். தற்போது கடலுக்கு அடியில் உள்ள நீரோட்டம் காற்றினால் வேகமாக இருப்பதால் தற்போது ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்குகின்றன. டிசம்பர் முதல் மார்ச் வரை கடற்புற்கள் கரை ஒதுங்வது வழக்கம், ஆனால் செப்டம்பர் மாதத்தில் கடற்புற்கள் அதிகளவு ஒதுங்குவதால் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மத்திய ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி வருகின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து கரை ஒதுங்கும் கடல் புற்களால் புனித நீராட முடியாமல் பக்தர்கள் அவதியடைகின்றனர். இதனால், கரை ஒதுங்கும் கடல் புற்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை சுமார் டன் கணக்கிலான கடற்புற்கள் சேகரிக்கப்பட்டு சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்டுள்ளது.