SBI; தரவுக் கசிவு தேசத்திற்கு அதிர்ச்சியளிக்கும் இந்த உண்மை குறித்து நிதியமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம். சு. வெங்கடேசன் எம்.பி
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்தி
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) சுமார் 3,75,000 பதிவுகள் டார்க் வெப் (Dark Web) எனப்படும் இணையத்தின் மறைக்கப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன என்பதை அறிந்து நான் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளேன். வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்கள், பிறந்த தேதிகள், பெயர்கள், பாலினம், மின்னஞ்சல் முகவரிகள், குடியிருப்பு முகவரிகள், வங்கிக் கிளை மற்றும் CIF அடையாள எண்கள், லீட் ஐடிகள் (Lead IDs), கடன் மற்றும் வாடிக்கையாளர் தொடர்புப் பதிவுகளுடன் தொடர்புடைய தரவுகள், பிற தொடர்புடைய கோப்புகள் உள்ளிட்ட 3,897 வாடிக்கையாளர் பதிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பதை அறிந்ததும் நான் அதே அளவுக்கு அதிர்ச்சியடைந்துள்ளேன்.
டார்க் வெப்பில் கசிந்திருக்கக்கூடும்
21 அக்டோபர் 2026 தேதியிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் செபி-க்கான தகவல் தொடர்பிலிருந்து தெரியவருவதாவது, 16 அக்டோபர் 2026 அன்று, வங்கியின் வாடிக்கையாளர் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்திருக்கக்கூடும் என்பது தொடர்பான எச்சரிக்கை குறித்து, அதன் அபாய நுண்ணறிவுச் சேவை வழங்குநர் (Threat Intelligence Service Provider), பாதுகாப்புத் துறை சைபர் முகமை (Defence Cyber Agency) மற்றும் இந்தியக் கணினி அவசரகாலப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஆகியவற்றிடமிருந்து வங்கிக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
அதேவேளையில், 22.10.2026 தேதியிட்ட நாளிதழில் வெளியான செய்தியில், “பாரத் ஸ்டேட் வங்கி தானாகவே இந்தத் தரவுக் கசிவைக் கண்டறியவில்லை என்றும், தரவுகள் இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர் வெளிப்புற அமைப்புகள் மூலம் இந்த விவரத்தை அறிந்துகொண்டது என்றும் இன்டர்நெட் சுதந்திர அமைப்பு (Internet Freedom Foundation) தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வங்கியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடுமையான குறைபாடு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட பாரத ஸ்டேட் வங்கி போன்ற மிகப்பெரிய வங்கியின் தரவுப் பாதுகாப்புத் திறன் எந்த அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்பதை முன்னெப்போதும் இல்லாத இந்த சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
பின்வரும் கேள்விகளுக்கு நான் விளக்கம் பெற விரும்புகிறேன்:
இந்தப் பதிவுகள் டார்க் வெப்பில் கிடைக்குமாறு எவ்வாறு கசிந்தது? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? பாரத ஸ்டேட் வங்கியின் பாதுகாப்புத் தடுப்புச் சுவர்கள் (Security Firewalls) ஊடுருவித் தாக்கப்பட்டனவா? அல்லது வங்கியின் உள்நபர்கள் யாரேனும் வேண்டுமென்றே தரவுகளைக் கசியவிட்டார்களா? ஊடகச் செய்தியின்படி, இந்தத் தரவுக் கசிவை வங்கியே தானாகக் கண்டறியத் தவறியது ஏன்?
இந்தத் தரவுக் கசிவு சுமார் 3,75,000 பதிவுகளுடன் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அதைவிட அதிகமான பதிவுகள் கசிந்துள்ளனவா?
தரவுகள் கசிந்த வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதற்கும், அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக என்ன நடவடிக்கைகளை எடுத்தது?
மேலும் தரவுகள் கசிவதைத் தடுப்பதற்காக SBI அவசரமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
பாரத ஸ்டேட் வங்கியின் பல முக்கியப் பணிகள் வெளி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் YONO செயலியின் பராமரிப்பு, KYC ஆவணங்களைச் சேகரித்தல் மற்றும் சரிபார்த்தல், கடன் வாடிக்கையாளர்களைக் கண்டறிதல், கடன் வசூல், தள ஒருங்கிணைப்புப் பணிகள் (Floor Coordination), அழைப்பு மையங்கள் (Call Centres), உதவி மையங்கள் (Help Desks), தரவுப் பதிவேற்றம், அட்டைப் பராமரிப்பு, காசோலைப் புத்தகங்களை அச்சிடுதல், ஆவணங்களைச் சேமித்தல் மற்றும் நிர்வகித்தல், பத்திரங்கள் தொடர்பான உதவிப் பணிகள், பண மேலாண்மை போன்றவை அடங்கும். இந்தப் பணிகளை வெளி நிறுவனங்களிடம் ஒப்படைத்ததே தரவுத் திருட்டுக்குக் காரணமா?
இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் யார் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது? அவர்கள் மீது என்ன பொறுப்பு கூறல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் தரவுகளை முழுமையாகப் பாதுகாப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?*
இந்தச் சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாரத ஸ்டேட் வங்கி மீது இழந்துள்ள நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக வங்கி என்ன நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது?
தங்களது உண்மையான வங்கிச் சேவைத் தேவைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாகப் பொதுத்துறை வங்கிகளையே சார்ந்திருக்கும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாரத ஸ்டேட் வங்கி விரைந்து செயல்படுவதற்குத் தாங்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.ன்தங்களிடமிருந்து உடனடியான பதிலை எதிர்பார்க்கிறேன். "எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
