கடந்த ஜூலை 22 ஆம் நாள் ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடிபில் ரெட்பிக்ஸ் சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
யூடியூப்பர் சவுக்கு சங்கர்:
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவர் குறித்து அவதூறு பதிவு ஒன்றை, சென்னையை சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர் அவரது ட்விட்டர் கணக்கில் சமீபத்தில் பதிவிட்டார். அந்த பதிவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் புகைப்படத்துடன், ‘அய்யா எதுவாக இருந்தாலும் என் கிட்டயே கேக்கலாம். கோர்ட்டில் பேச வேண்டாம். மாரிதாஸ் வழக்கை விசாரிக்கும் போது, ஒரு நாள் காலை 6 மணிக்கு அழகர்கோவிலில் யாரை சந்தித்தீர்கள்? எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவுக்காக சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவுத்துறைக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவர் தொடர்ந்து நீதித்துறை மீது அவதூறு பரப்பும் செயலையும், தனிநபர் தாக்குதல்களையும் செய்து வருகிறார். கடுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம். அவதூறுகளை ஏற்க முடியாது.
கடந்த சில மாதங்களாக சவுக்கு சங்கர் அவர் பார்வையை என் மீது திரும்பியுள்ளார். எனது பல உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத வார்தைகளால் விமர்சித்துள்ளார். அவரது பெரும்பாலான தாக்குதல்கள் தனிப்பட்டவை.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தரப்பு:
நான் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீது வலுவான நம்பிக்கை கொண்டவன். ஆனால் சங்கரின் சமீபத்திய ட்வீட் லெட்சுமண ரேகையை தாண்டிவிட்டது. மாரிதாஸ் என்பவர் மற்றொரு பிரபலமான யூடியூப்பர். அவர் மீது 2 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் வழக்கு வகைப்படி என் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. நான் அரசு மற்றும் புகார்தாரரிடம் விசாரித்து வழக்கை ரத்து செய்தேன். இதை சவுக்கு சங்கர் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார்.
என் தீர்ப்புகளை விமர்சிக்க சங்கருக்கு உரிமை உண்டு. ஆனால் இந்த புண்படுத்தும் ட்வீட் மூலம், என் நேர்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார். மாரிதாஸ் வழக்கு விசாரணையின் போது காலையில் அழகர்கோவிலில் யாரை சந்தித்தீர்கள்? என என்னிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ட்விட்டிலிருந்து, அந்த நபரின் தூண்டுதல் தான் மாரிதாஸ் வழக்கில் பிரதிபலித்தது என்று கூறியுள்ளார். இது நீதித்துறை மீதான தெளிவான அவதூறு. இதற்காக சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர்பாக மாலையில் உத்தரவில் கையெழுத்திட்டேன். அந்த நேரத்தில் சங்கர் மற்றொரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில், ‘ஒரு வக்கீல் நீதிபதியானா அவரது ஜூனியர் வழக்குகளை அவர் முன்னால் பட்டியலிடாதீர்கள் என்று உத்தரவு போடுவார்கள். ஆனால் ஜிஆர் சுவாமிநாதன் ஜீனியர் ஆண்டனி அருள்ராஜ் இதற்கு விதி விலக்கு. சுவாமிநாதனுக்கு தெரியாத சட்டமா?’ என குறிப்பிட்டுள்ளார்.
நான் உயர்நீதிமன்ற நீதிபதியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 70,014 வழக்குகளை விசாரித்துள்ளேன். வாங்கிய சம்பளத்துக்கு முழுமையாக உழைத்ததாக நம்புகிறேன். காலை 9.30 முதல் வேலை நேரம் தாண்டியும் பணிபுரிந்துள்ளேன். இதை கூட சவுக்கு சங்கர் கேலி செய்துள்ளார். சங்கர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்தில் அமைச்சுப்பணியாளராக பணிபுரிந்து பல ஆண்டுகளாக பிழைப்பூதியம் (பணியிடை நீக்கம் செய்யப்பட்டர்களுக்கு வழங்கப்படும் பாதி ஊதியம்) பெற்றவர் ஆவர்.
எந்த வேலையும் செய்யாமல் அரசிடம் பிழைப்பூதியம் பெற்ற நபர், வாங்கிய ஊதியத்துக்கு உண்மையாக வேலை பார்க்க வேண்டும் என நினைக்கும் நீதிபதி மீது அவதூறு பரப்புகிறார். சவுக்கு சங்கருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்பிக்க அரசுக்கு கடமை உள்ளது. சங்கர் மீது பாலியல் வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அவர் சம்பந்தப்பட்ட சிபிஐ வழக்கை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு சமீபத்தில் முடக்கப்பட்டது. ஆனால் அவர் மற்றொரு கணக்கை தொடங்கியுள்ளார். புராணக்கதைகளில் அசுரன் கொல்லப்படும் போது மீண்டும் ஒருவர் வருவார். அதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு சங்கர் வருவது போல் தெரிகிறது. சவுக்கு சங்கருக்கு எதிராக முகநூல், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலை தள நிறுவனங்களுக்கும் பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.
சவுக்கு சங்கர் எல்லை மீறியுள்ளார். இதனால் அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறது. பதிவுத்துறை சவுக்கு சங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக முகநூல், ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். சவுக்கு சங்கர் மீதான புகாரின் நிலை, அப்புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சமூகவலை தள அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். வழக்கில் உதவ மத்திய உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என உத்தரவில் கூறியிருந்தார்ர்.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, சவுக்கு சங்கருக்கு மாதம் எவ்வளவு பிழைப்பூதியம் வழங்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினர். அரசுத்தரப்பில்," கடந்த 2010 முதல் இன்றுவரை தோராயமாக 65 லட்சம் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியருக்கு, இவ்வளவு ஊதியம் வழங்கியுள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த ஜூலை 22 ஆம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில் ரெட்பிக்ஸ் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்