கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். 

Continues below advertisement

இந்த நிலையில், கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி விழா நடக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள், நடப்பாண்டும் இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்காக கேரள அரசு சுகாதாரத்துறை விரிவான சிகிச்சை ஏற்பாடுகளை செய்துள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை சன்னிதானம் மற்றும் பம்பையில் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

வழியெங்கும் ஆக்சிஜன் பார்லருடன் கூடிய 22 அவசர சிகிச்சை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலையேறும் போது பக்தர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை கருத்திற்கொண்டு இதய நோய் அவசர சிகிச்சை மையங்கள் அப்பாச்சி மேடு, சரங்குத்தி போன்ற இடங்களில் செயல்படுகிறது. இங்கு வென்டிலேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானம் அரசு மருத்துவமனைகளில் கார்டியாலஜி யூனிட்டுகள் 24 மணி நேரமும் தயாராக உள்ளது.மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு அதிவேக சிகிச்சை கிடைப்பதற்கு தேவையான ஸ்ட்ரப்டோ கைனேஷ் போன்ற மருந்துகள் பம்பை மற்றும் சன்னிதானம் மருத்துவமனைகளில் கிடைக்கிறது. மண்டல சீசன் தொடங்கி 24 நாட்கள் கடந்த நிலையில் 95 ஆயிரத்து 385 பேர் பம்பை மற்றும் சன்னிதானம் மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதய பாதிப்புகளுடன் வந்த 103 பேரில் 81 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மாரடைப்பால் இதயம் செயலிழந்து வந்த 25 பேரில் ஆறு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பம்பை மற்றும் சன்னிதானத்தில் சிகிச்சை பெற வந்தவர்களில் 337 பேர், பத்தனம்திட்டா, கோட்டயம் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். பம்பையில் அவசர கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டு சுகாதாரப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.  சன்னிதானம் மற்றும் பம்பை மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை அறை, ஐ.சி.யூ., எக்ஸ்ரே, லேப் வசதிகள் உள்ளது. இதய நோய் சிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் பாதுகாப்பாக மலையேறவும், எவ்வித பாதிப்பும் இல்லாமல் தரிசனம் பெறவும் சுகாதாரத்துறை 24 மணி நேரம் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.