வடகிழக்கு பருவமழையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில்...,” தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்து உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை குறித்து, பாதுகாப்பான முறையில் எதிர்கொள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். தற்போது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பொது அவசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த வடகிழக்கு பருவமழையை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி இருந்தால் சரி, இல்லை என்றாலும் சரி மக்கள் சேவையில் முதன்மையாக இருந்து வருகிறது. ஏனென்றால் இது மக்களுக்கான இயக்கமாகும்.
ஆட்சிக்கு ரெட் அலார்ட் கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்
ஆனால் தற்போது தமிழகத்தில் ஸ்டாலின் திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக தொடர்ந்து உள்ளது. வாரிசு அரசியல், குடும்ப அரசியல், விலைவாசி உயர்வு, போதைப்பொருள் நடமாட்டம், சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பாலியல் தொந்தரவு அதிகரிப்பு, 525 தேர்தல் வாக்குறுதியை மக்களுக்கு கொடுத்து விட்டு மோசடி செய்த அரசாக இந்த அரசு உள்ளது. தற்போது மன்னராட்சிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வகையில் வாய்ச்சொல் வீரராக இருந்து ஜனநாயக படுகொலை செய்து வருகிறார்கள். இதனால் மக்கள் உள்ளங்கள் கொந்தளித்து வருகிறது. இந்த ஆட்சிக்கு ரெட் அலார்ட் கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். 2026 ஆண்டில் திமுக ஆட்சிக்கு மக்கள் என்டு கார்டு போட தயாராகி விட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.