மதுரையில் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் பள்ளி கல்லூரி விடுமுறை குறித்து நாளை மழை பெய்வதை பொறுத்து முடிவு செய்தி அறிக்கையாக வெளியிடப்படும் - மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் பேட்டி.


 

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு 

 

மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் காலை 6 மணி முதல் தொடர்ச்சியாக 12 மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் பரவலான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழமாரட் வீதி சந்திப்பு, காமராஜர் சாலை பகுதி மற்றும் கர்டர் தரைப்பாலம், தினமணி நகர் பகுதியில் உள்ள கரிசல்குளம் கண்மாய் வைகையாற்று யானைக்கல் தரைப்பாலம் மற்றும் ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகை ஆற்று பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை உடனடியாக வெளியேற்றுவது தொடர்பான அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கரிசல்குளம் கண்மாயில் நீர் வரத்து குறித்தும் கண்மாய் கரைகளுடைய தன்மை குறித்தும் , தண்ணீரை வெளியேற்றும் பகுதி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

 

கனமழை

 

மதுரை ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்...,” மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று மதுரை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் மற்றும் அரசு சார்பில் தெரிவித்தார்கள். அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி மற்றும் அனைத்து உள்ளாட்சிகளுடன் இணைந்து ஏற்கனவே இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மதுரை மாவட்டத்தில் நடத்தியிருந்தோம். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மதுரை மாவட்டத்தில் சராசரி 48 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கள்ளந்திரியில் 7 செ.மீ  மழை பெய்துள்ளது. மேட்டுப்பட்டி சிட்டம்பட்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

 

கார் பாதிப்பு

 

மதுரை மாநகரின் வடக்கு பகுதியில் கனமழை பெய்திருக்கிறது.  இதனால் மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் நீர்வளத்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து சில பகுதிகளில் நேரடியாக  சென்று பார்வையிட்டோம். மதுரை மாவட்டத்தை பொறுத்த வரை இரண்டு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததாக தகவல் வந்தது ஆனால் அதில் உயிரிழப்பில்லை. கள்ளிக்குடி தாலுகாவில் ஒரு வீட்டு சுவர் இடிந்து விழுந்தது வீட்டில் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது. பேரையூரில் சாலை தண்ணீரில் அரிப்பு ஏற்பட்டது, கவனத்திற்கு வந்தவுடன் வட்டார அலுவலரை தொடர்பு கொண்டு அந்த சாலையை உடனடியாக சரிசெய்து  மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். வாடிப்பட்டி கச்சைகட்டி கிராமத்தில் கார்ஒன்றின் மீது மரம் விழுந்திருந்தது அதனை உடனடியாக தீயணைப்புத்துறை மூலமாக அகற்றிவிட்டார்கள்.

 


தண்ணீர் நிரம்பினால் பாதுகாப்பாக  வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது

 


மதுரை மாநகராட்சியில் அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கக்கூடிய 24/7 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை மூலமாகவும் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டுஅறை  மூலமாக அனைத்து பகுதிகளையும் கண்காணித்துவருகிறோம். 22 இடங்களில் மழைஅளவீட்டு மானி வைத்துள்ளோம் அதில் பதிவாகும் மழை அளவை பொறுத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போது வரை எந்த பாதிப்பும் இல்லை, நான்  மாநகராட்சி ஆணையாளர்  பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்றோம் கரிசல்குளம் கண்மாய்  நீர்வளத்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டு ஆய்வுசெய்தோம், தண்ணீர் நிரம்பினால் பாதுகாப்பாக  வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

 

ஏற்பாடுகள் தீவிரம்

 

மதுரை மாநகராட்சி கர்டர் ரயில்வே  பாலத்தின் கீழுள்ள தரைப்பாலத்தில் மாநகராட்சி சார்பில் 50 HP, 25 hp  மற்றும் 10 HP அளவில் மோட்டார்கள் வைத்துள்ளார்கள். 200க்கும் மேற்பட்ட மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வைகையாற்றில் இப்போது 3000 கன அடி அளவிற்கு உபரி நீர்  போய்க்கொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் கனமழை பெய்யும் போது யாரும் ஆற்றங்கரைக்கு மக்கள்  வரக்கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாத்தையாறு அணை, பெரியாறு அணை வைகை அணை ஆகியவற்றை நீர்வளத்துறை மூலம் அதிகாரிகள் மூலமாக கொள்ளளவு குறித்து கண்காணித்து அதற்கு தகுந்த அளவிற்கு நீரை வெளியேற்றுவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

நடவடிக்கை எடுக்கப்படும்

 

இன்றைய தினம் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்தார்கள்  நாளைக்கு மதுரையில் மழை குறைவாக பெய்ய வாய்ப்புள்ளது. இன்றைக்கு காலை இருந்த மழையை விட தற்போது குறைந்துள்ளது. மழை எப்படி பெய்கிறதோ அதை பொறுத்து   நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாவட்டத்தில்  3 ஆண்டுகள் சராசரியாக. பெய்த மழையை கணக்கீட்டு 27 இடங்கள் தாழ்வான இடங்களாக கண்டறிந்துள்ளோம், 15 இடங்கள் மாநகராட்சி பகுதிகளிலும் 12 இடங்கள் கிராமப்புற பகுதிகளிலும் கண்டறிந்துள்ளோம். இந்த பகுதிகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் பண்ணியிருக்கிறோம். இப்போது சாலையில் மட்டும் தான் சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது அதனை உடனடியாக மாநகராட்சி சார்பில் வாகனங்கள் மூலமாக வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள் .

 

நாளை பள்ளி விடுமுறை குறித்து கேள்விக்கு 

 

ஏற்கனவே இன்று மட்டும் தான் கனமழைக்கு உள்ளதாக, வானிலை  ஆய்வு மையம் மூலமாக தகவல் வந்துள்ளது. ஆனால் தற்போது மழை குறைந்துள்ளது். இப்போது வரைக்கும் எதுவும் முடிவாகவில்லை. விடுமுறை அறிவிக்க வேண்டிய சூழல் தற்போது வரை வரவில்லை. நாளை மழையை பொறுத்து பள்ளி விடுமுறை போன்ற முடிவு எடுக்கப்பட்டால் நிச்சயமாக பத்திரிகை செய்திகள் மூலமாக வெளியிடுவோம், இப்போது வரை அது போன்ற முடிவு இல்லை என்றார்.