ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கொரானா காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றுமுதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது‌. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படிவழிப்பாதையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணிமுதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப் படுகின்றனர். அன்னதானம், ரோப்கார் ஆகிய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.மின் இழுவை ரயில் சேவை மட்டும் இயக்கப்படுகிறது. மேலும் விபூதி மற்றும் பஞ்சாமிர்தம்  ஆகிய பிரசாதங்களும் வழங்காமல் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைனில் பதிவுசெய்து வரும் பக்தரகளை ஒரு மணிநேரத்திற்கு ஆயிரம் பேர் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் உணர்ச்சிமிகுதியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.




இன்று முதல் பக்தர்களின் நலன் கருதி இத்திருக்கோவிலின் குடமுழுக்கு விழா நினைவகத்தின் வழியாக சென்று படிபாதையை அடைந்து தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் செல்லும் வழியில் தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். திரு ஆவினன்குடி திருக்கோயிலில் உள்ள ஒரு வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சளி ,இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் திருக்கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.




இணையவழி முன்பதிவு அனுமதிச்சீட்டு உள்ள நபர்கள் மட்டுமே மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இணையவழி பதிவு இல்லாதவர்கள் நேரில் வந்தால் இணையவழி பதிவு செய்தவர்கள் வராத பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருக்கோயிலின் மலைக்கோயிலில் ஒரு மணி நேரத்திற்கு1000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


இத்திருக்கோயிலின் இணையதள முகவரியான www.palanimurugan.hrce.tn.gov.in  வடிவான இந்த தளத்தில் தரிசனத்திற்கான முன்பதிவு செய்து இலவச மற்றும் கட்டண தரிசனத்தில் தங்களுக்கு தேவையான தேதியில் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இணையதள வசதி இல்லாத சாதாரண கைப்பேசி வைத்திருக்கும் பக்தர்கள் 04545-242683 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர், முகவரி ,தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண் தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்கு முந்தைய நாள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும். மேற்படி முன்பதிவு கிராம பகுதிகளில் இருந்து அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். தினசரி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலும் முதலில் வரும் 200 அழைப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பதிவின் வழியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும்.




முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் தேவஸ்தான முடிகாணிக்கை மண்டபத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் முடிகாணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் இருப்பிட விபரம் மற்றும் தொலைபேசி எண் தெரிவிக்கப்படவேண்டும். இது போன்ற பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்து தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.