இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பறையங்குளம் சித்ரா தேவிக்கு (வயது 20), ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இன்றி நர்ஸ், உதவியாளர் பிரசவம் பார்த்தனர். ஆண் குழந்தை பிறந்த நிலையில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சித்ரா தேவி இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுகாதார இணை இயக்குநர், மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


பறையங்குளத்தை சேர்ந்த காளிமுத்து 25, கோவையில் தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி நேற்று அதிகாலை 5:40 மணிக்கு முதல் பிரசவத்திற்காக கோவிலாங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செவிலியர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். செவிலியரும், சுகாதார உதவியாளரும் பிரசவம் பார்த்தாக சொல்லப்படுகிறது. சித்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டு நிற்காததால் காலை 8:00 மணிக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.




ஆனால் செல்லும் வழியில் சித்ராதேவி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதனால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். பிரசவத்தின் போது டாக்டர் இல்லை என புகார் தெரிவித்தனர். மேலும் உரிய சிகிச்சை வழங்காததால் சித்ராதேவி இறந்ததாக புகார் தெரிவித்து உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சித்ரா இறப்பு குறித்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர்.




மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் பா.ஸ்டாலின் கூறுகையில், “இராமநாதபுரம் மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக இருக்கிறது. மாவட்டத்தில் இருக்கும் கிராம பகுதி மக்களுக்கு சிகிச்சை கிடைப்பது சவாலாக இருந்து வருகிறது. மகப்பேரு சிகிச்சையில் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. கடந்த மாதம் 28ம் தேதி கூட சாயல்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் ஜெயஜனனி என்பவர் இறந்துள்ளார். இந்நிலையில் நேற்று கோவிலாங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்ரா தேவி என்ற 20 வயது பெண் பிரவத்திற்கு பின் இறந்துள்ளார். இது போன்ற சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக தமிழக அரசு இந்த சம்பவங்களில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


சித்ராதேவி இறப்பு குறித்து விசாரிக்க சுகாதரத்துறை அதிகாரி இந்திராவிடம் பேசினோம்,” சுகாதார இணை இயக்குநர், மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை நடத்த உள்ளோம். விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து முழு தகவல் அளிக்கிறேன்” என நம்பிக்கை தெரிவித்தார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Actor Marimuthu: மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் - நடிகர் விமல் நேரில் அஞ்சலி