புதுக்கோட்டை மாவட்டம்,  அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் அசுத்தம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. 

 


 

 

இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குடிநீர் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் பொது கூட்டம் நடத்த காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததை ரத்து செய்து பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 


 

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம். இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து 19.03.2023 பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு கீரனூர் காவல் துறையினரிடம் அனுமதி கோரி மனு செய்தோம். ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு எனக் கூறி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது சட்டத்திற்கு புறம்பானது.



 

எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குடிநீர் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பொது கூட்டம் நடத்த காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததை ரத்து செய்து பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.