நகராட்சிக்கு உட்பட்ட ஒப்பந்த வேலைகள் செய்யும் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கான பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியை 71 லட்சத்திற்கு மேல் கட்டாமல் நிலுவையில் வைத்ததால், பட்டுக்கோட்டை நகராட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி பட்டுக்கோட்டை, நகராட்சி ஆணையர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஒப்பந்த வேலைகள் செய்யும் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியை அதற்கான அலுவலகத்தில் கட்ட வேண்டும்.
அதன் நிலுவைத் தொகை 71 லட்சத்திற்கு மேல் இருந்து வருகிறது. இதன் காரணமாக பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தின் இந்தியன் வங்கி கணக்கை முடக்கி உள்ளனர். இதனால் தேர்தல் நேரங்களில் நகராட்சி சார்பாக செலவுகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே பட்டுக்கோட்டை நகராட்சியின் அலுவலக வங்கி கணக்கை முடக்கியதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தனர்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் பணியாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம், பட்டுக்கோட்டை நகராட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை ரத்து செய்தது.இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தரப்பில், கர்நாடக மாநிலத்தில் 13 நகராட்சிகளில் இதே போல வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், இந்தியா முழுவதும் எத்தனை மாநிலங்களில் பணியாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் நகராட்சியின் வங்கி கணக்கை முடக்கியுள்ளது?இந்தியா முழுவதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறதா?இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைபாடு என்ன? என கேள்வி எழுப்பி இது குறித்து பணியாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.