மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் ஏற்கனவே 58 கி.மீ. தூரமுள்ள மதுரை - ஆண்டிபட்டி ரயில் நிலையங்களுக்கிடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு பணிகள் ஏற்கனவே முடிவடைந்தன.
தற்பொழுது ஆண்டிபட்டி - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 17 கி.மீ. தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, அதில் ரயில் இன்ஜின் வேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வுகள் செய்யப்பட்டது. தற்போது இந்த புதிய ஆண்டிபட்டி - தேனி அகல ரயில் பாதையில் மார்ச் 31 அன்று மும்பை மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்ய இருக்கிறார். காலை 09.30 மணி முதல் ஆண்டிபட்டியில் துவங்கி மதியம் 01.00 மணி வரை மோட்டார் டிராலி மூலம் ரயில் பாதையை ஆய்வு செய்கிறார்.
அவருடன் ரயில்வே கட்டுமான துறை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் ஆகியோர் ஆய்வில் கலந்தகொள்ள இருக்கின்றனர். ஆய்விற்கு பின்பு அன்றைய தினம் மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை தேனி - ஆண்டிபட்டி இடையே ரயில் வேக சோதனை ஓட்டம் மூலம் ஆய்வு நடத்த இருக்கிறார். எனவே, இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் காலகட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ரயில் பாதை அருகில் குடியிருப்போர் ரயில் பாதையை கடக்கவோ, நெருங்கவோ வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திண்டுக்கல் : சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் புதிதாக வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம்..