பாம்பன் அன்னை இந்திரா காந்தி சாலை பாலம் இன்று தனது சேவையை 34 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்தின் கிழக்கு முகமாக அமைந்து, இலங்கையுடன் சில மணல் திட்டுகளின் மூலம் இணைந்துள்ள ஒரு பகுதிதான் ராமேஸ்வரம். இந்த ராமேஸ்வரம் பகுதியில் இருக்கும் ஒரு அழகிய கடல் சாலை பாலம்தான் இந்த பாம்பன் அன்னை இந்திரா காந்தி சாலை பாலம். கடந்த 1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் சாலை  பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது. பல்வேறு முறை தடைப்பட்ட இப்பாலம்., 14 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகளுக்கு பிறகு  1988 அக்டோபர் 2ஆம் தேதி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியது. இதற்கு அன்னை இந்திரா காந்தி சாலை பாலம் என பெயரிடப்பட்டது.




அன்று முதல், ரயிலை மட்டும் நம்பி ராமேஸ்வரம் வந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வாகனங்களில் எப்போது வேண்டுமானாலும் ராமேஸ்வரம் சென்று திரும்பலாம் என்ற நிலையில் உருவானது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும், இப்பகுதி மீனவர்கள் கடலில் பிடிக்கப்படும் மீன்களை உடனுக்குடன் வாகனங்களில் ஏற்றி வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு உருவானதால் மீன்பிடித் தொழிலும் ஏற்றம் பெற்றது.




மேலும், பாம்பன் தீவில்தான் இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் ராமேசுவரம் அமைந்துள்ளது. இங்குள்ள ராமநாத சுவாமியை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் வழியாக ராமேசுவரத்துக்கு ரயிலில் மட்டும் சென்று வந்த யாத்ரீகர்கள் சாலைப்பாலம் கட்டப்பட்ட பிறகு வாகனங்களில்  செல்வதும்  ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். ராமேசுவரத்துக்கு சிமெண்டு பாலம் வழியாக வாகனங்களில் வருபவர்கள், அதில் இருந்து இறங்கி பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தையும்  ரசிக்காமல் செல்வதில்லை.




பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை புயல் மழை எனும் எந்தவித தடையுமின்றி வாகன போக்குவரத்து முத்திரை பதித்து வரும் அன்னை இந்திரா காந்தி சாலை பாலம் தனது தொடர்  சேவையில் 34 ஆண்டில் இன்று காலை எடுத்து வைக்கிறது. தற்போது பாம்பன் கடலில் ஆயிரத்து 250 ரூபாய் கோடி செலவில் 8 வழித்தடை வசதிகளுடன் கூடிய புதிய சாலை பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இதற்கான முதல்கட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. கடலுக்கு நடுவில் கம்பீரமாக காட்சி அளிக்கும் பாம்பன் சாலை  பாலம் இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதுதான்  அனைவரின் விருப்பம்.