ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரத்தில், சமண மதத்தை தோற்றுவித்த மகாவீரர் சிலையை  சாமியாய் நினைத்து வழிபட்டு பாதுகாத்து வரும் கிராமமக்கள், பல  நூற்றாண்டு கால இந்த சிலையைப் பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.


சமண சமயத்தை உலகறிய செய்தவர் மகாவீரர். இவர் சமண சமய மதத்தின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசித் தீர்த்தங்கரர் என சொல்லப்படுகிறது. மஹாவீரர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் 599 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தற்போது பீகாரில் உள்ள வைசாலி என்ற மாகாணத்தில் இருக்கும் சித்தார்த்தர் என்ற அரசர்க்கும் திரிசலாவிற்கும் மகனாக பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் வர்த்தமானர். அரசக் குடும்பத்தில் பிறந்ததால் மிகவும் செல்வச் செழிப்புடன் வளர்க்கப்பட்டார். ஆனால் சிறு வயது முதலே ஆன்மீகத்தின் மீது ஈடுபாடும் தேடலும் இவருக்கு  இருந்துள்ளது.




வளர்ந்த பின்னர் யசோதை எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். மகாவீரருக்கு ப்ரியதர்ஷனா என்னும் மகளும் பிறந்தாள். தன்னுடைய முப்பதாவது வயதில் அரச வாழ்க்கையும் துறந்து இல்லற வாழ்க்கையையும் துறந்து துறவறம் மேற்கொண்டார். தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு தியானம் வழிபாடு என தொடர்ந்ததால் மகாவீரர் எனும் பெயரை அடைந்தார். சமண சமயத்தை பரப்புவதற்காக இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வந்தவர் மகாவீரர். இவரது எளிமையான பேச்சைக் கேட்டு அனைத்து மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து இவரது பேச்சைக் கேட்க காத்திருந்தனர். இவருடைய காலகட்டத்தில்தான் சமண சமயத்தின் கருத்துக்கள் இந்தியாவெங்கும் பரவியது. 30 வயதில் துறவறம் பூண்ட மகாவீரர் தனது நாற்பத்தி இரண்டாவது வயதில் சாலா மரத்தடியில் ஞானம் பெற்றுள்ளார்.




இறைவன் நிலையை பெற்றவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் என்றும் சமண சமய மதம் கூறுகின்றது. இவர்கள் ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்களுடைய சிலைகளை தமிழ் கோவில்களில் வைத்து அவர்களை வணங்கி வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு கிராமத்தில் அவர் மகாவீரர் என்றே தெரியாமல் கிராமத்து காவல் தெய்வங்களை போல அவரது சிலையை வைத்து கோவில் கட்டி தினமும் பூஜை செய்து கிராம மக்கள் வணங்கி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே அமைந்துள்ள ‘மேலக்கிடாரம்’ கிராமத்தில் கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ‘மகாவீரர்’ சிலையை இந்து மத கடவுளாக   நினைத்து அப்பகுதி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். திறந்துவெளியில் அமைந்துள்ள அந்த சிலையை பாதுகாக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சாயல்குடியிலிருந்து வாலிநோக்கம் செல்லும் கிழக்குகடற்கரை சாலையின் வலதுபக்கமாக செல்லும் சாலைக்கு  உட்புறத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில்,  5 அடி உயரமும், 3 அடி சுற்றளவும் கொண்ட கருங்கல்லால் ஆன சமணமதத்தை தோற்றுவித்த  மகாவீரரின் சிலை அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னர்கள் சமண மதத்தை தழுவிய போது இந்தப் பகுதியில் இக்கோவில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு காலமாற்றத்தால் சமண மதம் இங்கு மறையத்  தொடங்கிய நிலையில் அந்த சிலை இன்று வரை அக்கிராம மக்களால், பூஜை செய்து வணங்கப்பட்டும்  பத்திரமாக பாதுகாக்கப்பட்டும்  வருகிறது. 




இங்குள்ள மகாவீரர் சிலையை அந்த பகுதி பொதுமக்கள் இந்து மதக் கடவுளை வணங்குவது போலவும் கிராமத்து காவல் தெய்வங்களை  பூஜை செய்து வணங்குவது போல வழிபட்டு வருகின்றனர். அதே வேளையில் ஆடு, கோழிகளை பலியிடுவதையும் படையலிடுவதையும் முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். இந்து மத  சாமி இல்லை என தெரிந்தும்  அங்கு சிறப்பான முறையில் பொதுமக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த கோவிலில் விலை மதிக்கமுடியாத சிலையை பாதுகாக்கவும், இது குறித்து ஆராயவும் அரசு மற்றும் தொல்லியல் துறைக்கு  அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.