ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று  பள்ளிகளுக்கும், இன்று பள்ளி,கல்லூரிகளுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. புறநகர் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததாலும் தண்ணீர் செல்ல வழி இல்லாததாலும் நீர்வழிபாதைகளை நிரப்பி வீடுகள் கட்டி உள்ளதாலும் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.





இதன் காரணமாக நீர்நிலைகளில் கட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. எங்கு பார்த்தாலும் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி குளம்போல நிற்கிறது. இந்த மழைநீரில் வேறுவழியின்றி நடந்து சென்று  பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை தொடர்ந்து நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில்,  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி எல்லைக்குட்பட்ட 28-வது வார்டு சேர்ந்த எம் ஜி ஆர் நகர், கிழக்கு பகுதியில் வசித்து வரும் காட்டு நாயக்கர், இருளர் இன சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்குள் ஆற்று நீர் புகுந்ததால் வீடுகளுக்குள் வசிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தவர்கள் நேற்று முன் தினம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், அவர்களை சந்தித்து தாங்கள் வசிக்கும் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லை, குடிநீர் வசதியில்லை, மின்சார வசதியில்லை என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்து வந்தனர். 





இந்நிலையில் நேற்று அப் பகுதிக்கு ஆய்வு செய்ய வருகை தந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், பரமக்குடி வருவாய் வட்டாட்சியர், பரமக்குடி நகராட்சி ஆணையாளர்(பொ), மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை முற்றுகையிட்டு பொதுமக்கள் தங்களின் குடியிருப்பு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், இனி ஒருபோதும் எங்களால் சாக்கடையிலும் சகதியிலும் வசிக்க முடியாது எனவும் தாங்கள் தற்போது செய்ய வந்திருக்கும் நிவாரண பொருட்கள் வேண்டாம் எங்களுக்கு நிரந்தரமாக சாலை வசதி குடிநீர் வசதி மின்சார வசதி போன்றவைகள்தான் வேண்டுமென முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.





இந்நிலையில் கடந்த முப்பதாண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த பழங்குடியின மக்களிடம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்களும் பரமக்குடி வருவாய் வட்டாட்சியர் அவர்களும் உங்கள் பகுதியில் நில அளவைகளை சீர் செய்து அடிப்படை வசதிகளை நிச்சயம் செய்து தருவதாக, உறுதி அளித்த பின்பு நிவாரண பொருட்களை மக்கள் பெற்றுச் சென்றனர். ஆற்று நீரால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்ற பரமக்குடி சட்டமன்ற உறுப்பினரை பழங்குடியின மக்கள் முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி போராடியதும், நிவாரண பொருட்கள் வேண்டாம், நிரந்தரமாக அடிப்படை வசதிகள்தான்  வேண்டும் என  அங்குள்ள பழங்குடியின மக்கள் வைத்த கோரிக்கை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.