தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த ரங்கன் 32, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா 27, இவர்களுக்கு திருமணமாகி 12 வருடமாகிறது. 8 மற்றும் 6 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஐஸ்வர்யா தனியாக இருக்கும் நேரங்களில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மூலம் ராமநாதபுரம் அருகே கொம்பூதி பகுதியை சேர்ந்த விஜய் என்பவரோடு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களாக கணவன் வேலைக்கு சென்ற பின் செல்போனிலேயே இருவரும் பேசி பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்று கிழமை வீட்டை விட்டு வெளியேறி கொம்பூதியில் உள்ள தனது வலைதள காதலனை பார்க்க ராமநாதபுரம் வந்துள்ளார். காதலன் தனது நண்பர் வீட்டில் தங்க வைத்து  திங்கள் கிழமை பதிவு திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளதாக தெரிகிறது. பதிவு திருமணம் செய்ய ஐஸ்வர்யாவிடம் அடையாள அட்டை கேட்டுள்ளனர். முதலில் தர மறுத்தும், பின்னர் தனியாக அழைத்து சென்று தான் திருமணமானவள் என்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது என கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த காதலன் விஜய்  மனம் உடைந்த காதலிக்கு திருமணம் ஆனது தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த விஜய்  இருவருக்கும் நடக்க இருந்த  திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பெண் விஜயிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக தெரிகிறது. 




ஆனால், விஷயமறிந்து சுதாரித்துக்கொண்ட விஜய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யாவை ஒப்படைத்துள்ளார். அந்தப்பெண்ணை விசாரித்த மகளிர் காவலர்கள், உடனடியாக காதலியின் கணவர் ரங்கனுக்கு தகவல் தெரிவித்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனிடையே, மனைவியை காணவில்லை என ஐஸ்வர்யாவின் கணவர் ரங்கன் திருச்செந்தூர் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில்,  அப்போது தான், ரங்கனுக்கு ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் மனைவி இருப்பது தெரியவந்ததும்  தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு உடனடியாக ரங்கன் பதறியடித்து வந்துள்ளார். ஆனால்,  ராமநாதபுரம் வந்த கணவர் ரங்கனுடன் செல்ல மறுத்துள்ளார் ஐஸ்வர்யா. 




மகளிர் போலீசாரோ எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தொடர்ந்து புத்திமதி கூறியும் ஐஸ்வர்யா கணவருடன் செல்ல மறுத்ததால், காலையில் அவரை திருச்செந்தூர் காவல்துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால்,  இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் தங்க வைக்க கூடாது என்ற விதிகளின்படி ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சமூக நலத்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பாதுகாப்பிற்காக பெண்காவலர் மற்றும் சமூக நலத்துறை பெண் அலுவலர் என  இருவரும் அவருடன்  இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை கழிவறைக்குச்  சென்ற ஐஸ்வர்யா கதவைப்பூட்டிவிட்டு  தனது  துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாத்ரூம் சென்றவரை நீண்ட நேரமாகியும் காணவில்லை என பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தகவலறிந்த நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.