ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ளது இந்திரா நகர். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்திரா நகரில் வசிக்கும் மக்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில் சமுதாய திருமண மண்டபத்தின் 70 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் முழுமை பெறாமல்  நிறுத்தப்பட்டது.




இந்நிலையில் இந்த கட்டிடத்திற்கு அருகே மதுபான கடைகள் இயங்கி வருவதால்  மது பிரியர்கள் இரவு பகலாக இந்த திருமண மண்டபத்தை பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் வெளியில் இருந்து  கஞ்சா உள்ளிட்ட  போதை பொருட்களை வாங்கி வந்து இந்த கட்டடத்திற்குள் வைத்து பயன்படுத்தி வருவதால் காலப்போக்கில்   போதைக்கு அடிமையானவர்களின் கூடாரமாக இந்த திருமண மண்டபம் மாறிவிட்டது. கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள இந்த சமுதாய திருமண மண்டபத்தை சுற்றி மது பிரியர்களுக்கும் கஞ்சா குடிப்பவர்களுககும் இடையே சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்க கூடிய பொது மக்கள் மற்றும் இளம்பெண்கள் இரவு நேரங்களில் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.




மேலும் இப்பதியில் வசித்து வரும் சில பொதுமக்கள் இந்த கட்டிடத்தை பொது கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சமுதாய திருமண மண்டபத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் அல்லது இந்த கட்டிடத்திற்கு பாதுகாப்பு அளித்து வெளிநபர்கள் உள்ளே செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டு சென்றனர். ஆனால் இன்று வரை பொது மக்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவில்லை. போதை ஆசாமிகளின் கூடாரமாக உள்ள இந்த கட்டிட சுவர்களில் அநாகரிகமான வார்த்தைகளில் எழுதுவதும், ஆபாசமான புகைப்படங்களை வரைவதையும்  போதை ஆசாமிகள் வழக்கமாக கொண்டிருந்தனர்.


இதனை மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் 'அப்துல் மாலிக்' போதை பொருட்களை பயன்படுத்தும் நபர்களுக்கு மன மாற்றம் ஏற்பட்டு இந்த கட்டிடத்திற்குள் வருவதை தடுக்கும் விதமாக  சுவர்களில் கரிக்கட்டை மற்றும் பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தி தேசிய தலைவர்கள், சமூக நீதி  போராளிகள், சுவாமி, பிரபலங்கள் படங்கள் உள்ளிட்டோரின் படங்களை ஒவியமாக வரைந்து வருகிறார். இவர் வரைந்துள்ள ஓவியங்கள் அனைத்தும் 3டி வடிவத்தில்  மிகவும் தத்ரூபமாக வரையப்பட்டு வருகிறது. இவரின் நோக்கம் இவ்வாறான புகைப்படங்கள் மற்றும் சுவாமி படங்கள் உள்ள இடங்களில் இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுதுத்த மாட்டார்கள் அவர்களுக்கு நிச்சயம் மன மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் கடந்த ஒரு வார காலமாக வரைந்து வருகிறார். வீரப்பன், காரல் மார்க்ஸ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், புத்தர், பாரதியார், தமிழர்களின் பாரம்பரிய அடையாளம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள்  வரையப்பட்டுள்ளது.




அதுமட்டுமின்றி; மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அந்த கட்டிடத்தை பயன்படுத்தும்  இளைஞர்களின் ஓவியங்களை  வரைய தொடங்கியுள்ளார். உடனடியாக மாவட்ட நிர்வாகம் கட்டி முடிக்கப்படாமல் அரைகுரை நிலையில் உள்ள இந்த சமுதாய திருமண மண்டபத்தை முழு  கட்டுமான பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் அல்லது இதனை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு கட்டப்பட்ட சமுதாய திருமண மண்டபம் தற்போது மது பிரியர்கள் மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கூடாரமாக மாறியுள்ளது. இதனை தடுக்கவும் இளைஞர்கள் போதை பழகத்தில் இருந்து வெளி வந்து மன மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இந்த  இளைஞர்கள் கையில் எடுத்துள்ளது ஓவியம் வரையும் முயற்சி அப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.