தமிழ்நாடு முழுவதும் நேற்று 5ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து ஊராட்சிகள், நகராட்சி, பேரூராட்சி, மற்றும் மாநகராட்சிகள் வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பரிசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1059 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.  திண்டுக்கல் நகர் பகுதியில் மட்டும் 100 இடங்களில் நடந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரபல துணிக்கடையில் 5 சதவீத தள்ளுபடி கூப்பன், பிஸ்கட் பாக்கெட் மற்றும் சேமியா பாக்கெட்கள் வழங்கப்பட்டன.




அதிகளவில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் வர்த்தக சபை சார்பில் குலுக்கல் முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தேர்வு செய்யப்பட்டு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் தலைமையில் நடந்த முதல் குழுக்களில் வடமதுரை ஊராட்சி ஒன்றியம் தேர்வானது. இதை தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம ஊராட்சி குலுக்கல் முறையில்  மோர்பட்டி கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.



திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 17,30,600 பேர் உள்ள நிலையில் இவர்களில் 11,33,043 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இது மொத்த எண்ணிக்கையில் 65.5 சதவீதம் ஆகும். 3,16,540 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதன் மூலம் மொத்த எண்ணிக்கையில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விகிதம் 8.3 சதவீதமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்  முதல் முறையாக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த 1,225 தடுப்பூசி முகாம்கள் மூலம் 72,459 பேருக்கும், செப்டம்பர் 19ஆம் தேதி அன்று நடைபெற்ற 359 தடுப்பூசி முகாம்களில் 30,124 பேருக்கும், கடந்த 26ஆம் தேதியன்று அன்று  1,010 தடுப்பூசி முகாம்களில் 81,287 நபர்களுக்கும், கடந்த அக்டோபர் 03ஆம் தேதி அன்று நடைபெற்ற 898 முகாம்களில் 50,649 நபர்களுக்கும் என மொத்தம் 3,492 முகாம்களில் 2,34,519 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தன. 



இந்த நிலையில் ஐந்தாவது முறையாக நேற்று நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 34284 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 30922 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 65,206 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவரக்ளின் விகிதம் 68% ஆக  அதிகரித்துள்ளது.




திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளில் இதுவரை 52.6 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் வயது முதிர்ந்தவர்களுக்கு நடமாடும் மருத்துவக்குழு மூலம் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முன்களப் பணியாளர்களில் இதுவரை 99.5 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை செலுத்தாமல் விடுபட்டவர்களுக்கு அவர்களது துறைகள் மூலம் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், ஆட்டோக்கள் மூலம் மைக்செட் வைத்து பிரச்சாரம் செய்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்