ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது என மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஆகியோா் புகாா் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்,  தொழில் துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு நடத்திய ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.




ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மாவட்ட ஆளுமைக்குழு, கணிப்பாய்வு மற்றும் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள  கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ராமநாதபுரம் எம்.பி.  கே.நவாஸ்கனி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் முன்னிலை வகித்தாா். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் திருவாடானை எம்.எல்.ஏ கரு.மாணிக்கம், பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் உ.திசைவீரன், ஒன்றியக் குழுத் தலைவா் பிரபாகரன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் மாவட்ட, ஒன்றியக்குழுத் தலைவா்கள் பேசும்போது, மாவட்டத்தில் உரத்தட்டுபாடு நிலவுகிறது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நியாயமான விலையில் உரம் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். ராமநாதபுரம்- கீழக்கரை சாலையில் ரயில்வே பாலம் பல ஆண்டுகளாகக் கட்டப்பட்டு நிறைவடையவில்லை. பாலப்பணி முடியாததால் மக்கள் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தியே செல்லும் நிலை உள்ளது. பரமக்குடியில் ரயில்வே தரைவழிப்பாதையில் தேங்கிய மழை நீரையும், ரயில்வே கால்வாயில் தேங்கிய கழிவு நீரையும் அகற்றுவது அவசியம்.




ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராவல் மண் அள்ளுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே, சாலைப் பணிகளும், அரசு நலத்திட்டத்தில் கட்டப்படும் வீட்டுப் பணிகளும் தாமதமாகின்றன. மாவட்ட ஊராட்சிகளில் நலத்திட்ட நிதிகளை மக்கள் பிரதிநிதிகளால் உடனடியாக செலவிட்டு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றமுடியவில்லை. ஆட்சியா் உத்தரவுக்கு காத்திருக்கும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு முடிந்த பணிகளுக்குக் கூட தற்போது நிதியை பெறமுடியாத நிலையே உள்ளது. மக்கள் பிரதிநிதிகளுடன் மாவட்ட அதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தமுடியும். ஆனால் அதிகாரிகள் தாமதத்தால் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் கூறும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் செயல்படுவது அவசியம் என பேசினர். இதற்கு பதில் அளித்துப்பேசிய அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் புகாருக்கு வேளாண்மை, ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் பதில் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டைப் போக்க கூடுதல் உரம் வரவழைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ராமநாதபுரம் ரயில்வே பாலம் கட்டுவதற்கான நிதி பெறப்பட்டு பணி தொடங்கப்படும் என்றனா். இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன், கோட்டாட்சியா் சேக்மன்சூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 




ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களால்  செய்யப்பட்ட நான்கு எம்.எல்.ஏக்கள் ஒரு எம்.பி என  மக்கள் பிரதிநிதிகள் அனைவருமே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய தேவையான ஒத்துழைப்பை அதிகாரிகள் வழங்குவதில்லை என பகிரங்கமாக வெளிப்படையாக எம்பி எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்து இருப்பது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்து உள்ள நடராஜபுரம், கரையூர், அண்ணாநகர், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க் கூடிய இடங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு நடத்தினார். முன்னதாக ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியில் பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்புத் துறை சார்பாக பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அதனை அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.


அப்போது, அப்பகுதி பொதுமக்கள் அமைச்சரை சந்தித்து பேசுகையில்,  தொடர்ந்து மாவட்டத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர் இப்பகுதியை ஆய்வு செய்து விட்டு சென்று விட்டனர். ஆனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதியில் இருந்து மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிதாக பொறுப்பேற்ற அரசு தீர்வு காண வேண்டும்  என  பொதுமக்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்தனர். இந்நிகழ்வின் போது தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கணிப்பாய்வுக் கூட்டத்தில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்று புகார் வைத்த நிலையில், ஆய்வுக்கு வந்த அமைச்சரிடமும் தொகுதி மக்கள் பல்வேறு குறைகளை முன்வைத்து உடனே தீர்வு காண அதிகாரிகள் முன்னிலையிலேயே புகாராக கூறியிருப்பதும் மாவட்ட உயர் அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.