’சிவந்த’ மண் என்று போற்றப்படும் சிவகங்கை மாவட்டத்தில் மண்சார்ந்த தொழில்கள் அதிகளவு நடைபெற்றுள்ளது. செங்கல், மணல், ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு செய்து வாங்கிச் செல்வார்கள். மண் மற்றும் நீரின் தரத்தால் இது போன்ற பொருட்கள் தென்வாட்டங்களை தாண்டியும் வாங்கிச் செல்லப்பட்டுள்ளது. இதில் மண்பாண்ட பொருட்களும் அடக்கம். 



 

மானாமதுரையில் செய்யப்படும் கடம் உலக முன்னணி இசைக்கலைஞர்கள் கையிலும் தவழ்கிறது. மானாமதுரையில் விளக்கு சுட்டி முதல் பிரமாண்ட சுவாமி சிலைகள் வரை இயற்கையான முறையில் செய்யப்படுகிறது. மானாமதுரையை போல் பூவந்தி, காரைக்குடி உள்ளிட்ட பகுதி மண்பாண்ட கலைஞர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



மானாமதுரையில் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தொற்று காரணமாக மண்பாண்டப் பொருட்கள் விற்பனை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வருடந்தோறும் ஆடியில் கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள கோயில்களில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி முளைக்கொட்டு உற்ஸவம், ஊர்வலங்கள் நடைபெறும், ஆனால் தற்போது கொரோனா தொற்றால் ஆடி திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் முளைப்பாரி ஓடுகள், கஞ்சிக்கலயங்கள் பெருமளவில் தேக்கமடைந்துள்ளதாக மண்பாண்ட கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



இது குறித்து மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சொசைட்டி தலைவர் லெஷ்மணன்....," கடந்த ரெண்டு வருசமாவே... இப்புடிதே தம்பி., எங்க நெலம மோசமா இருக்கு. மழை பெஞ்சாலே தாங்க மாட்டோம்.  கொரோனா தாக்கத்த எப்புடி தாங்கிருப்போம்னு பாருங்க. நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு கஷ்டம், ஓங்கி அடிச்சுபுடுச்சு. இப்பதா மூணு மாசமா தையா தக்கானு மீண்டு வாரோம்.



இந்தியா முழுசும் கொரோனா சரியானாதான் பழைய நிலைமைக்கு வரமுடியும். மண்பாண்ட கலைஞர்களுக்கு மழைகால நிவாரண தொகை 5ஆயிரம் ஜூன் மாசம் வந்து சேந்துரும். ஆனா இந்த வருசம் தாமதமாகுது இதை முதல்வர் ஐயா கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.



மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பாக செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !

 

பூவந்தி பகுதி மண்பாண்ட கலைஞர் மணி...," முன்னைக்கு இப்ப பரவாயில்லை. நிலைம மாறிருச்சு. கொஞ்சம் கொஞ்சம் மண்பாண்ட பொடுளுக வெளியே போகுது. பூச்சட்டிக தான் அதிகளவுக்கு கேக்குறாங்க. அதுனால சூளைக்கு அதிகமா பூச்சட்டி தான் ஏத்துறோம். ஜனவரிக்கு முன்னாடியே பொங்கல் பானை அதிகமா ரெடி செஞ்சுரனும் வர்ணபகவான் எங்களை கொஞ்சம் பாத்துகனும்" என்றார்.