இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை.. புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

பாலத்தின் தூண்கள் கடல் பரப்பின் அடி ஆழத்தில் ஊன்றப்பட்ட பெரிய இரும்பு குழாய்களில் வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் மூலம் கட்டப்பட்டுள்ளது.

Continues below advertisement
இந்தியாவின் முதல் செங்குத்தாக திறக்கும் புதிய பாம்பன் பாலம் ரயில்வே பொறியியல் துறைக்கு ஒரு மைல் கல் ஆகும் புதுமையான நவீனமயமாக வடிவமைக்கப்பட்ட மேல் நோக்கி செங்குத்தாக திறக்கும் ரயில் பாலம் சிறிய, பெரிய கப்பல் போக்குவரத்திற்கு பெரிய வகையில் உதவி புரியும்.
 

புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள்

 
புதிய பாம்பன் பாலம் மண்டபம் மற்றும் பாம்பன் ரயில் நிலையங்களுக்கிடையே 2.08 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரட்டை இரயில் பாதை அமைக்கும் வகையில் அகலமான 99 தூண்கள் கடலில் நிறுவப்பட்டுள்ளன. அதன் மேல் ரயில் பாதை அமைப்பதற்காக 102 இரும்பு கிர்டர்கள் அமர்த்தப்பட்டுள்ளன. 18.3 மீட்டர் நீளம் உள்ள 99 கிர்டர்கள், ஒரு 72.5 மீட்டர் நீளமுள்ள செங்குத்தாக திறக்கும் பால கிர்டர்கள், மேலே கீழே சென்று வரும் இந்த கிர்டரில் உள்ள ரயில் பாதை சரியாகப் பொருந்தும் படி இருபுறமும் 10.2 மீட்டர் நீளமுள்ள சிறிய கிர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செங்குத்து பாலத்தை திறப்பதற்கு மூடுவதற்கும் தலா ஐந்து நிமிடம் 30 செகண்ட் ஆகும். மனித ஆற்றல் மூலம் செயல்பட்ட பழைய பாலத்தை திறப்பதற்கு 30 நிமிடங்களும், மூடுவதற்கு 20 நிமிடங்கள் கால நேரம் ஆகும். 2.05 கிலோமீட்டர் நீள பழைய பாலத்தில் 12.2 மீட்டர் நீளம் உள்ள 144 கிர்டர்கள், நடுவில் கப்பல் போக்குவரத்திற்கு திறக்க 65.3 மீட்டர் நீளமுள்ள கிர்டர் ஆக மொத்தம் 145 கிர்டர்கள் நிறுவப்பட்டிருந்தன. இருபுறமும் தலா நான்கு தொழிலாளர்கள் பாலத்தை திறப்பதற்கும் மூடுவதற்கும் பயன்படுத்தப்பட்டனர். புதிய பாலம் கடற்காற்றால் துருப்பிடிக்காமல் 35 ஆண்டுகள் வரை காக்கும் வகையில் மூன்று அடுக்குகளாக நவீன வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. பழைய தூக்கு பாலத்திற்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை வர்ணம் பூசப்பட்டு வந்தது. மற்ற பால பகுதிகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை வர்ணம் பூசப்பட்டு வந்தது.
 
புதிய பாலத்தில் நடுப்பகுதி கிர்டர் 650 டன் எடை கொண்டது. இதை செங்குத்தாக கப்பல் சென்று வருவதற்கு வசதியாக பாலத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தலாம். இது சாலைப் பால உயரத்திற்கு இணையானது. மேலே 17 அடி உயரத்திற்கு தூக்கப்படும் பாலத்தின் உயரம்கடல் மட்டத்திலிருந்து 22 அடி ஆகும். இந்த 650 டன் தூக்கு பாலத்தை எளிதாக ஏற்றி, இறக்க கோபுரங்களின் இருபுறமும் 315 டன் எடை கொண்ட செவ்வக பளு உள்ளது. கிணற்றில் நீர் இறைப்பது போல மின்சார இயந்திரவியல் மோட்டார்
 

புதிய பாலத்தில் வசதி

 
இயக்கப்பட்டவுடன் பாலம் மேலே செல்ல இருபுற பளுவும் கீழே வரும். அதேபோல பாலம் கீழே வரும் போது இவை மேலே செல்லும், பாலத்தை ஏற்றி, இறக்க நான்கு கோபுரங்களிலும் தலா ஆறு ராட்சத கம்பி வடங்கள் என 24 கம்பி வடங்கள் கோபுரங்கள் மேலே உள்ள அறைகளில் உருளையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பாலத்தை இயக்க ஒரு கம்பி வடமே போதுமானது, இருந்தாலும் பாதுகாப்பிற்காக கூடுதலாக ஐந்து ஐந்து கம்பிவடங்கள் பிணைக்கப்பட்டுள்ளன. பாலத்தை இயக்க SCADA (Supervisory Control and Data Acquisition) என்ற கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலங்களில் 81 டிகிரி உயரத்திற்கு தூக்கமுடிந்த பழைய தூக்கு பாலத்தின் இரு பிரிவுகளும் இறுதிக்காலத்தில் 25 டிகிரி மட்டுமே தூக்க முடிந்தது. புதிய பாலத்தின் முழு நீளத்திற்கும் ஊழியர்கள் சென்று வர தனி பாதுகாப்பான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பழைய பாலத்தில் இல்லை.
 

வலுவான தூண்கள்

 
கோபுரங்களின் மேல் உள்ள அறைப்பகுதிக்கு சென்று வர நான்கு கோபுரங்களிலும் இரண்டில் மின் தூக்கிகள் மற்ற இரண்டில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தூக்கு பல பகுதியை முழுமையாக கண்காணிக்க 16 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. தூக்கு பாலம் மேலே இருக்கும் போதும் கீழே இருக்கும் போதும் அதுவும் செவ்வக பழுப்பகுதிகளும் பாதுகாப்பிற்காக முறையாக பூட்டி வைக்கப்படுகிறது. தூக்கு பாலப்பகுதி சரியாக கீழே வந்து ரயில் பாதையில் பொருந்துவதற்கு சென்டரிங் ராட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதியின் படி ரயில்களை புதிய பாலத்தில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திலும் தூக்கு பாலப்பகுதியில் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இயக்க முடியும். தூக்கு பாலத்தை இணைக்கும் கணினி தொழில்நுட்பத்தில் கடல் காற்றின் வேகம், கம்பி வடங்களின் நீட்சி போன்ற முக்கிய தகவல்களையும் கண்காணிக்கிறது. கடல் பகுதியில் தூக்கு பாலத்தை தாங்கி நிற்கும் இரு தூண்களின் மீது படகுகள் மோதாமல் இருக்கும் வகையில் நீண்ட கரை போன்ற அமைப்பு இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் பத்து மீட்டர் ஆழத்திற்கு இரும்பு குழாய்கள் சொருகி அதற்குள் நவீன கான்கிரீட் கலவையை செலுத்தி வலுவான தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 

பல்வேறு வசதி

 
தூண்களை சுற்றியுள்ள இரும்பு குழாய்கள் தற்போது துருப்பிடித்தது போல் தெரிந்தாலும் அவை கான்கிரீட் தூண்களை ஒருவகையில் கடல் அரிப்பில் இருந்து காப்பாற்றுகிறது. தூக்கு பாலம் கிர்டருடன் ஒரு கிளிப் மட்டும் பொருத்தி இணைத்தால் போதுமானது, ஆனால் பாதுகாப்பிற்காக இரு கிளிப்புகள் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது. தூக்கு பாலம் எளிதாக மேலே. கீழே சென்று வர சம எடை இருக்க வேண்டும் என்பதால் தூக்கு பாலத்தின் இரண்டாவது ரயில் பாதை பகுதியில் தண்டபாளங்களும் சிலிப்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இயல்பான கடல் ஆர்ப்பரிப்பில் மேல் எழும்பும் உப்பு நீர் தெறிக்காத உயரத்தில் பால கிர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தை இயக்கும் ஊழியருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 58 கிலோமீட்டருக்கு மேல் காற்று வீசினால் ரயில் சிக்னல்கள் தானாக இயங்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 650 கிலோவாட் திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. தூக்கு பாலம் இயங்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஜெனரேட்டர்களும் இயங்கும். பாம்பன் ரயில் நிலைய அதிகாரிக்கு தெரியாமல் ரயில் பாலத்தை ஏற்றவோ இறக்கவோ முடியாது.
Continues below advertisement
Sponsored Links by Taboola