மதுரையில் 10 கிலோ கஞ்சாவை பதுக்கி பொட்டலங்களாக சில்லறை விற்பனைக்கு பயன்படுத்த முயன்ற 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கிலும் சுபாஸ் சந்திர போஸ்  தப்பிய நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

தோப்பில் கஞ்சாவுடன் கும்பல்

 

மதுரை மாட்டுத்தாவணி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 31 ஆம் தேதி மதியம்  காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது பாண்டி கோயில் பின்புறம் உள்ள குறிஞ்சி தோப்பு பகுதியில்  6 பேர் கொண்ட குழுவினர் கஞ்சாவுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் 10 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக மாற்றி சில்லறை விற்பனை செய்வதற்காக திட்டமிட்டு காத்திருந்த மதுரை செல்லூர் கோமுட்டி (எ) விஜய சுதர்சன்(28), அவனியாபுரம் மச்ச சிவா (எ) சிவக்குமார்(31), கோ.புதூரை சேர்ந்த தயா (எ) தயாநிதி(24), நெய்வேலியை சேர்ந்த தமிழரசன் (23), அகிலன் (24) ஆகிய 5 பேரை கைது செய்த நிலையில் இந்த வழக்கில் மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியை சேர்ந்த சுபாஸ் சந்திரபோஸ் காரில் தப்பியோடியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் 31 ஆம் தேதி மாலை என்கவுண்டர் செய்யப்பட்டதும் குறிப்பிடதக்கது.

 

காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

 

இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். என்கவுண்டரில் சுட்டுகொல்லப்பட்ட சுபாஸ் சந்திரபோஸ் கிளாமர் காளி கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்த நிலையில் 31 ஆம் தேதியன்று கஞ்சா பதுக்கி விற்பனை செய்த வழக்கிலும் தப்பியோடியதாகவும் மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.