பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக அந்தந்தத இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் நடைபெறவுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் பி.மூர்த்தி தலைமையிலான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.

 

மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் கண்காணிப்பாளர், கால்நடை துறை இணை இயக்குநர் , வருவாய்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் பங்கேற்றனர்.



 

அப்போது அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில்,"அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் நடத்த உள்ளது. ஒரு ஊர் போட்டியில் விளையாடும் மாடு மற்றொரு ஊரில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டாது" என்றார். தொடர்ந்து, போட்டியில் விளையாடிய பின்னரும் மாடுகளின் உடல் நிலை பரிசோதிப்பதற்கும், வீரர்களுக்கு உரிய தண்ணீர் வசதி, இருக்கை வசதி செய்வதற்கும், ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி முழுவதும் சி.சி.டி.வி., கேமரா அமைத்து, இரண்டு அடுக்கு தடுப்பு வசதிகள் ஏற்படுத்த உள்ளதாகவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



 

மாட்டு உரிமையாளர் ஒருவர் பேசுகையில்,மாடுகளை அவிழ்க்கும் போது சாதி பெயர் இல்லாமல் உரிமையாளர் பெயர், கமிட்டி பெயர் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும். பரிசாக வழங்கப்படும் தங்க காசுகள் தரமற்றவையாக இருப்பதாக குற்றச்சாட்டு வைத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, "தங்க காசுகள் அனைத்தும் ஹால்மார்க் முத்திரையுடன் இருக்கிறதா என்பது உறுதி செய்த பின்னரே வழங்கப்படும்" என உறுதி அளித்தார்



 

இறுதியாக பேசிய அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டியில் தங்களை சேர்க்க மறுக்கும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்துக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரும், அமைச்சர் மூர்த்தியும் செயல்படுவதாக கூறி கூட்ட அரங்கினுள் கோஷம் எழுப்பியபடி, வாயில் வரை வந்தவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண