சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களின் குடும்ப சொத்துக்கள் முடக்கப்படும் என தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச் செயலை தடுப்பதற்காக தேனி மாவட்டத்தில் 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' கண்காணிப்புப் பணிகள் நடைபெறுகிறது.




 


மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் 4 போலீசார் உட்பட 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநரின் "கஞ்சாவேட்டை 2.0" உத்தரவினை தொடர்ந்து, தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த கடந்த மாதம் 19ஆம் தேதி காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பூபாலன், முரளிதரன், விஜயன், அருண் பாண்டி, ஓடைபட்டியை சேர்ந்த சரத், நாராயண தேவன் பட்டியைச் சேர்ந்த கணேசன் ஆகியோர்களிடமிருந்து 84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கஞ்சா விற்பனை செய்த அனைவரும் கைது செய்யப்பட்டு ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண் 52/2022 பிரிவு 8( C r/w 20(b}{(i)(C) 29 (1) &25 NDPS act -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.




 


தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்கின் அறிவுறுத்தலின் படியும், திண்டுக்கல் சரக காவல் துறை துணை தலைவர் ரூபேஷ்குமார் மீனா வழிகாட்டுதலின் படியும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் மேற்பார்வையில் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் 5 தனிப்படைகளின் உதவியுடன் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற குற்றசெயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு உதவி செய்யும் உறவினர்கள் ஆகியோர்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.




 


அதன் அடிப்படையில் கஞ்சா கடத்தலுக்கு தேவைப்படும் பணபரிவர்த்தனை செய்ய பயன்படுத்திய நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுடைய 9 வங்கி கணக்குகளை அடையாளம் கண்டு அவ் வங்கிகணக்குகளை சட்டப்படி முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கும் கஞ்சா தொழிலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்யும் நபர்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் மீது மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இத்தொழிலில் ஈடுபடும் நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தேனி மாவட்டத்தில் துவங்கியுள்ள ஆபரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில், கஞ்சா கடத்துவர் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது குறித்த தகவல்களை போலீசாருக்கு அளிக்கும் நபர்களுக்கு தகுந்த பரிசு, சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண