ப்ரணவ் ஜுவல்லரி மோசடி


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ப்ரணவ் ஜுவல்லரி என்ற பெயரில் நகை  கடைகள் தொடங்கி மாதாந்திர நகை சேமிப்பு சீட்டு திட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் தீபாவளியின் போது சீட்டு பணம் திரும்ப அளிக்காமல் திடீரென கடைகள் மூடப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.  ப்ரணவ் ஜுவல்லரி நகை சேமிப்பு திட்ட மோசடி குறித்து மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் இந்த வழக்கானது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவினர் விசாரணை நடத்திவந்தனர். இதையடுத்து ப்ரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், இவரது மனைவி கார்த்திகா மதன் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். 




மாவட்ட நீதிமன்றத்தில் சரண்டர்


இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ப்ரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளரான மதன் செல்வராஜ் நேரில் சரண்டர் ஆனார். இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜோதி அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தபோது மதன் செல்வராஜை வரும் 21-12 2023 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மதன் செல்வராஜை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதன் செல்வராஜை கைது செய்யும் நடவடிக்கையாக ஏற்கனவே லுக்அவுட் நோட்டிஸ் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் உரிமையாளர்கள் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடுத்துள்ளார்.




உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு..


ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களான சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், இவரது மனைவி கார்த்திகா மதன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தனர்.


வழக்கின் கடந்த விசாரணையின்போது, “மனுதாரர்கள் தரப்பில், கொரோனா கால நெருக்கடியால் தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சுமூகமான முறையில் தீர்வு காண தயாராக உள்ளோம் என கூறப்பட்டது.


வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது:


அரசு தரப்பில் மதன் செல்வராஜ் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரடைந்து விட்டார், அவரது மனைவி கார்த்திகா இன்னும் தலைமறைவாக உள்ளார். 100 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது, இதுவரை 1900-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி முன்ஜாமின் கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டர் .