மதுரை வடக்கு ஆவணி மூல வீதி தியாகி தாயம்மாள் பகுதியை சேர்ந்த விமலநாதன் அதே பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் குடும்பத்தினரோடு விமலநாதன் கடந்த 12 ஆம் தேதி வெளியே சென்று இருந்த நிலையில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 அரை சவரன்  தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.  இச்சம்பவம் குறித்து திலகர் திடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.



 

அதனை தொடர்ந்து காவல் உதவி ஆணையர் தங்கத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடினர். தொடர்ந்து விமலநாதன் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று விமலநாதனின் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடியது தெற்குவாசல் சப்பாணி கோயில் பகுதியை சேர்ந்த 19 வயதான பொன்மணி மற்றும் அவரது நண்பர் சுந்தரேசன் என்பது தெரிய வந்தது.



 

இருவரும் தேனி மாவட்டத்தில் பதுங்கி இருப்பதும் கண்டறியப்பட்டு, தனிப்படை காவல்துறையினர் இருவரையும் கைது செய்து திருடுபோன 45 சவரன் நகைகளை மீட்டனர். திருட்டுச்சம்பவத்தில் முதன்மை குற்றவாளியான பொன்மணி மீது மதுரை மாநகர காவல்துறையில் மட்டும் 9 வழக்குகள் இருப்பதாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை குறி வைத்து திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும், மேலும் பல்சர் இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்பதற்காக திருடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.



 





 

திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு மேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் கண்டறிந்து விரைவாக கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டினார். நகை கொள்ளையை தொடர்ந்து காவல்துறையினர் விரைவாக பணி செய்து நகையை மீட்டுள்ளனர். காவல்துறையினருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பாதிகப்பட்ட விமலநாதன் தெரிவித்தார்.