கஞ்சா வழக்கு:


மதுரையைச் சேர்ந்த தமிழரசன், கண்ணன் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளோம். தங்களுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.


நீதிபதி கேள்வி:


அப்போது நீதிபதி, கஞ்சா விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என கேள்வி எழுப்பினார்.


அரசு தரப்பு பதில்:


அரசு தரப்பில், தமிழக அரசு தடை செய்த குட்கா பொருட்கள், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களின் அசையா சொத்து மற்றும் அசையும் சொத்து, ஆதார், பான் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் முடக்கி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பதிலளித்தார்.


நீதிபதி பாராட்டு:


இதை பதிவு செய்த நீதிபதி புகழேந்தி, தற்போது தமிழ்நாடு  அரசும், காவல்துறையும் குட்கா பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்தேன். குறிப்பாக தென் மண்டல ஐஜி  அவர்களின் செயலும் பாராட்டு கூறியது என கூறி ஜாமீன் மனுக்களின் விசாரனையை ஒத்திவைத்தார்.




ஸ்ரீவில்லிபுத்தூர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் உயரமான கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு .


மேலும், துப்பாக்கிச் சுடும் மையத்தில் சுற்றுச் சுவர் அமைப்பது தொடர்பாக வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.


வழக்கு:


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசுப்பு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை ஒட்டிய பகுதியில் காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இதன் சுற்றுப்பகுதியில் பல கிராமங்கள் அமைந்துள்ளன. சாம்பல் நிற அணில்கள் சரணாலயமும் உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இப்பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் அதிக உயரத்திற்கு கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.


விசாரணை:


இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ், விஜயகுமார்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில், "நெடுஞ்சாலைக்கு எதிர்புறமாக  பயிற்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக இந்த பயிற்சி மையம் இயங்குகிறது. இதுவரை எவ்விதமான அசம்பாவிதமும் நிகழ்ந்ததில்லை.  சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர் .