மதுரை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைத்த, ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கிய உறுதிமொழியை மாணவர்கள் எடுத்ததால், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று முன் தினம் மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், 2018ஆம் ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.  இந்நிலையில், பாரம்பரிய ஹிப்போகிராடிக் உறுதிமொழிக்கு பதிலாக, இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் கொண்ட உறுதிமொழியை ஆங்கிலத்தில் மாணவர்கள் எடுத்துள்ளனர்.



இந்நிலையில், பாரம்பரிய உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருத உறுதிமொழி எடுத்ததாக தகவல் தீ போல் பரவிய நிலையில், மருத்துவ கல்வி இயக்ககம் டீன் ரத்தினவேலுவை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக  மருத்துவகல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..,” நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை, ஆங்கிலத்திலயே உறுதிமொழி ஏற்றோம், உறுதிமொழி ஏற்பின்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி தான் ஏற்கப்பட்டதாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து தேசிய மருத்துவகல்லூரி இயக்குனரக அறிவிப்பின்படிதான் ஹிப்போகிரடிக், மகரிஷி சரக் ஷபத் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுக்கலாம் என்ற அறிவிப்பின்படி மாணவர் பேரவையினராகவே இணையதளத்தில் எடுத்து உறுதிமொழி எடுத்தோம்,





நேற்றுதான் மாநில அரசு மருத்துவகல்லூரி இயக்குனரகம் சரக் ஷபத் உறுதிமொழி எடுக்ககூடாது என சுற்றறிக்கை வந்துள்ளது, அவசரகோலத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்துவிட்டோம், தேசிய மருத்துவகல்லூரி இயக்குனரகம் 2021 கல்வியாண்டு மாணவர்களுக்கான அறிவிப்பில் இருந்ததன் அடிப்படையில் நாங்களே மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்தோம் , தேசிய மருத்துவ கல்லூரி இயக்குனரகம் இரு உறுதிமொழிகளில் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் என கூறியிருந்த நிலையில் மாணவர் பேரவையினர் நாங்களே சரக் ஷபத் உறுதிமொழி எடுத்தோம், சரக் ஷபத் உறுதிமொழி ஏற்பில் எந்த அரசியலும் இல்லை, உறுதிமொழி ஏற்பு தொடர்பாக நாங்கள் கல்லூரி நிர்வாகம் யாரிடமும் இது குறித்து கேட்காமலயே நாங்களாகவே உறுதிமொழியை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து உறுதிமொழி ஏற்றோம்” என்றார்.