உசிலம்பட்டி நகர் பகுதியில் நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை எடுத்து வந்து பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி நகராட்சி நிர்வாகத்தினர் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை:


ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் தமிழக அரசு, கடந்த 2018 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகளை, அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டி கைப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் / பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஷ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது PVC விளம்பர பதாகைகள், முட்கரண்டி கரண்டிகள், கத்திகள், உறிஞ்சு குழாய்கள், தட்டுகள் மற்றும் அழைப்பிதழ்கள். சிகரெட் பாக்கெட்டுகள் மேல் சுற்றப்பட்டுள்ள பிளாஸ்டிக் தாள்கள் போன்ற தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கினை தடை செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு:


பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழக்கமான ஆய்வுகள் மற்றும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு மூடுதல் உத்தரவுகளும் பிறப்பித்து வருகிறது. இதுவரை வாரியத்தால் தடை செய்யப்பட்ட 240 பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை, உசிலம்பட்டி நகர் பகுதியில் நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை எடுத்து வந்து பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி நகராட்சி நிர்வாகத்தினர் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.
 



 

டன் கணக்கில் நெகிழி பொருட்களை பறிமுதல்:


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கடந்த ஒரு மாத காலமாக உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வணிக வளாக கடைகளில் நகராட்சி அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி டன் கணக்கில் நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தும், நெகிழி பைகள் விற்பனை செய்தவர்களிடம் சுமார் 1 லட்சம் வரை அபராதமும் விதித்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரிசுகள் வழங்கி பாராட்டினர்:


இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி நகர் பகுதியில் நெகிழி பைகளை தவிர்த்து மஞ்சள் பையுடன் வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் பொதுமக்களை கண்காணித்து, அவர்களில் சுமார் 20க்கும் மேற்பட்டோரை குலுக்கல் முறையில் தேர்வு செய்த நகராட்சி அலுவலர்கள், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி நகர் மன்ற தலைவர் சகுந்தலா முன்னிலையில் பரிசுகளை வழங்கி பாராட்டினர். தொடர்ந்து அவர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கி, நெகிழி பயன்பாட்டை தடுக்க கோரியும், நெகிழி பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.