வலிப்புத் தாக்கங்களுக்கான சிகிச்சை முறை
மதுரை, பல ஆண்டுகளாக கை, கால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருந்துகளின் மூலம் சிகிச்சை எடுத்தும் குணமடையாத 30 வயதான ஒரு இளைஞருக்கு மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செய்யப்பட்ட ஒரு மேம்பட்ட அறுவைசிகிச்சை செயல்முறையினால் நிரந்தர நிவாரணம் கிடைத்திருக்கிறது. ‘டெம்பரல் லோபெக்டாமி வித் அமிக்டாலா- ஹிப்போகாம்பெக்டோமி' என அழைக்கப்படும் இச்செயல்முறை, அவரது வலிப்புத்தாக்கங்களுக்கு காரணமான மூளைத் திசுக்களை வெற்றிகரமாக அகற்றியிருக்கிறது. தென் தமிழ்நாட்டில் இத்தகைய சிகிச்சை மேற்கொள்ளப்படுவது மிக அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்புவரை ஒவ்வொரு வாரமும் பலமுறை வலிப்பு பாதிப்புகளை எதிர்கொண்ட இந்நோயாளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இம்மருத்துவமனையில் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பிறகு இவர் இப்போது இயல்பான, சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு ஆண்டு வரை, வலிப்பு நோய்க்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்வது தேவைப்படும். ஆனால் அதற்கு பிறகு எந்த மருந்தும் இவருக்கு தேவைப்படாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருந்தை முழுமையாக நிறுத்தமுடியும்
மூளை நரம்பியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். நரேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒரு வாரத்தில் பலதடவை ஏற்படுகிற வலிப்புத்தாக்கங்களின் காரணமாக இந்நோயாளியின் வாழ்க்கைத்தரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. திடீர் திடீரென ஏற்படும் இந்த வலிப்பு நேர்வுகளினால் அவரது சுற்றுப்புறம் குறித்த அவரது விழிப்புணர்வை அவர் இழந்து விடுவார். இதன் காரணமாக பல விபத்துகள் அவருக்கு ஏற்பட்டு உயிருக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்திருக்கின்றன” என்று விளக்கமளித்தார். அவர் மேலும் பேசுகையில், “இதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்ட போதிலும் பலனின்றி வலிப்புத்தாக்கங்கள் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. எனவே வலிப்புத்தாக்கத்தின் அமைவிடத்தை துல்லியமாக அடையாளம் காண்பதற்காக 3T MRI, PET CT மற்றும் வீடியோ EEG உட்பட மிக நவீன நோயறிதல் தொழில்நுட்பங்களையும், சாதனங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம். அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளான அமிக்டாலா, டெம்போரல் லோப்கள் மற்றும் ஹிப்போகாம்பஸ் ஆகியவற்றை அகற்றுவதற்காக ஒரு திறந்தநிலை மூளை அறுவைசிகிச்சையை நாங்கள் மேற்கொண்டோம். மூளையின் பிற கட்டமைப்புகளை பாதிக்காமல் இதை வெற்றிகரமாக நாங்கள் செய்து முடித்தோம். அதைத்தொடர்ந்து இந்நோயாளி விரைவாக குணமடைந்து மீண்டிருக்கிறார்; அதற்கு பிறகு வலிப்புத்தாக்கம் ஏற்படாத வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். இன்னும் ஓராண்டிற்கு வலிப்புத்தாக்கம் வராமல் தடுப்பதற்கான மருந்தை அவர் எடுத்துக்கொள்வது அவசியமாக இருந்தாலும், அதற்கு பிறகு மருந்தை எடுத்துக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தி விடுவதற்கு ஒரு வலுவான சாத்தியம் இருக்கிறது” என்று கூறினார்.
துடிப்பான வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ முடியும்
அமிக்டாலா, டெம்போரல் லோப்கள் மற்றும் ஹிப்போகாம்பஸ் ஆகியவற்றை நீக்குகிற அறுவைசிகிச்சை, பகுதியளவு வலிப்பு இருக்கிற நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்பாதிப்புள்ள நோயாளிகளுக்கு மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து வலிப்புத்தாக்கங்கள் உருவாகும், இவை மருந்துகளுக்கு பலனளிப்பதில்லை. வீடியோ EEG போன்ற தொழில்நுட்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை துல்லியமாக அடையாளம் காட்டுவதற்கு மருத்துவர்களுக்கு உதவுகின்றன. மூளை திசுவிற்குள் வெட்டுக்கீறல்கள் செய்வது இந்த மேம்பட்ட அறுவைசிகிச்சையில் தேவை இருக்காது; அதற்கு பதிலாக மூளையில் ஏற்கனவே இருக்கிற இடைவெளிகள் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுகும் மருத்துவர்கள், சேதமடைந்த திசுவை துல்லியமாக அகற்றுவார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகள் அகற்றப்படும் மருந்துகள் தேவைப்படாது. இந்த அறுவைசிகிச்சைக்கு பிறகு, எஞ்சிய நாயாளிகள், மருந்துகளின் உதவியோடு இயல்பான மற்றும் துடிப்பான வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ முடியும்.