வைகை ஆற்றுக்குள் செல்லும் சாலையில் வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனை முன்னிட்டு பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
அமாவாசை என்பது உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று இணைவதால் அதன் மூலம் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசை தினத்தில் பிறக்கும் குழந்தைகளின் மூளை அவர்கள் வளர்ந்த பின்னர் மற்றவர்களைக் காட்டிலும் வேகமாக வேலை செய்யும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் புத்தி மிகவும் கூர்மையாக செயல்படும், ஆகையால் அவர்கள் அறிவை சரியான முறையில் செயல்படுத்தினால் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள். அமாவாசை தினத்தில் பிறப்பவர்களில் பலருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதாக கூறப்படுகிறது. அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதை அமாவாசை திதி என்பர். ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னோர்களின் கர்மா
காலம் கடந்த முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. முன்னோர்கள் உயிருடன் இருந்த போது, அவர்களை சரிவர கவனிக்காமல் இருப்பவர்களுக்கு, முன்னோர்கள் அடையும் துன்பங்கள் அனைத்தும், பாவத்தின் வடிவமாகி கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக நம்பப்படுகிறது. பாவங்களிலேயே பெரிய பாவமாக கருதப்படுவது காலம் கடந்த முன்னோர்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் அதாவது நமது முன்னோர்கள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் இறந்த பின்னர் அவர்கள் ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு தவறாமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள் என நம்பப்படுகிறது. இதனால் பித்ருக்கள் தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்களாம். ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறியுள்ளார், இதில் இருந்தே தர்ப்பணத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்
தை அமாவாசையை முன்னிட்டு வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்