108 வைஷ்ணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமான ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு அருகில் இருந்த, பல ஆண்டுகள் பழமையான அத்திசேரி காவு கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை சட்டத்திற்கு புறம்பாக பலர் அனுபவித்து வருவதாகவும், நிலங்களை மீட்டு கோவில் வசம் ஒப்படைக்கக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரியை எதிர் மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைக்கிளையில் மனு தாக்கல் :
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் சேவா அறக்கட்டளையின் தலைவர் தங்கப்பன், மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆதிகேசவ பெருமாள் கோவிலானது 108 வைஷ்ணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகேசவ பெருமாள்கோவிலை சுற்றி 12 முக்கிய காவு ஸ்தலங்கள் மூலிகை கொடிகளால் சூழப்பட்ட இயற்கையான இடத்தில் வழிபாட்டில் இருந்து வந்தது. இதில் ஒன்றான அத்திசேரி கோவில் மொத்த பரப்பு 6 ஏக்கர் 83 சென்ட் அளவு கொண்ட சொத்தாகும். தற்போது அத்திசேரி கோவில் எந்தவித வழிபாடும் இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் அத்திசேரி காவு கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை எந்த ஒரு உரிமையும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பலர் அனுபவித்து வருகிறார்கள். இந்த கோவிலின் சொத்துகளை கிரையம் பெற தனி நபருக்கு உரிமை கிடையாது. ஆனால் இந்த சொத்துகள் பலருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் அந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். எனவே இந்த பட்டாக்களை ரத்து செய்து, நிலங்களை மீட்டு கோவில் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, இந்த வழக்கில் மாவட்ட வருவாய் அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
6வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இரட்டை ஆயுள் தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்.
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, தனது பெற்றோர் பணிக்கு சென்றபோது தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது மதுரை மாவட்டம் உச்சப்பரம்புமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ்(40) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கானது மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் இன்று வழக்கானது நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சுரேஷ்க்கு பாலியல் வன்கொடுமைக்கான ஒரு ஆயுள் தண்டனையும், பட்டியலின சிறுமியை வன்கொடுமை செய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்