"பெற்றோர் மாணவர்களுக்கு இந்த இரண்டு விசயங்களை அறிமுகம் செய்ய வேண்டும்" -  மதுரை தமுக்கம் புத்தகத் திருவிழாவில் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேட்டி


மதுரை தமுக்கம் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழாவை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். பின்னதாக நூல்களை பார்க்க வந்திருந்த  முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு குழந்தைகளைச் சந்தித்து பேசினார்.


 






அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," மதுரை வந்திருந்த நான் மதுரை புத்தகத் திருவிழா நடைபெறுவதை தெரிந்து கொண்டதால் புதிய புத்தகங்களை பார்க்க வந்தேன். இங்கு குழந்தைகளும், பெற்றோர்களும் வந்தது நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தருகிறது. நம்முடைய குழந்தைகள் உலகத்தில் உள்ள 188 நாடுகளுடன் போட்டி போட உள்ளனர். அதனால் வாசிப்பு பழக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இரண்டு விஷயங்களை முக்கியமாக அறிமுகப்படுத்த வேண்டும். ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று நூல் வாசிப்பு பழக்கம்.




இவை இரண்டும் சுகத்தையும், ஆர்வத்தையும் தருகிறது. இதனால் இவர்கள் ஆர்வத்துடன் எல்லா செயல்களையும் செய்வார்கள். ஒட்டுமொத்த மதுரை மக்களும் மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். கலை, அறிவியல் என எல்லா வகையான நூல்களும் இங்கே உள்ளது. அதே போல் நம் தாய்மொழி தமிழைப் போல் ஆங்கிலத்தையும் மாணவர்கள் திறம்பட எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எங்கு வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் எந்த உலக நாடுகளிலும் வேலை செய்யலாம். அதனால் ஆங்கிலத்தை முக்கியமாக கருதி படிக்க வேண்டும்.




செல்போன் பயன்பாடு ஒட்டுமொத்தமாக தவறு என சொல்லி விட முடியாது. அதில் நல்ல விஷயங்களும் இருக்கிறது நமக்கு தேவையான ஒன்றை தேடிப் படிக்க செல்போன் உதவுகிறது. அதனால் செல்போனில் உள்ள நல்ல விஷயங்களை குழந்தைகள் தேடி அறிஞர்களைப் பற்றியும், இறந்த அறிஞர்களைப் பற்றியும் அவர்கள் பேச்சுக்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியும். கல்வி என்பது மார்க் எடுப்பதில் மட்டும் கிடையாது கற்றுக் கொள்வது அவசியமாக இருக்கிறது. கல்வி அவர்களுக்கு சுகத்தை தருகிறது. குழந்தைகள் தேடித் தேடி படிக்க வேண்டும். இது ஒன்றும் கஷ்டமான ஒன்று கிடையாது" என தெரிவித்தார்.