சராசரியான சூழலில் படித்து முடித்து, வேலை கிடைத்து, அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதையே சவாலாகப் பலர் கருதுகிறோம். ஆனால், அசாதாரணச் சூழல்களை எதிர்கொண்டு சாதித்துக்காட்டும் சிலரும் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்க்கர நாற்காலி ஓட்டத்தில் மாவட்டம் தொட்டு, சர்வதேசப் போட்டிகள்வரை சாதித்துக்கொண்டிருக்கும் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தமணம்பட்டியை சேர்ந்த 28 வயது இளைஞர் எஸ் மனோஜ்குமார். 



இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சமீபத்தில் பங்கேற்ற சர்வதேச அளவிலான பாரா அத்லட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி, வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் பங்கேற்ற இவர். 100.மீ. 200 மீ. சக்கர நாற்காலி ஓட்டத்தில் (வீல் சேர் ரேஸ்) தல 1 வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.


100 மீ.சக்கர நாற்காலி ஓட்டப் போட்டியில் முதன் முறை கலந்துகொண்டபோதே முதலிடம் பிடிக்க மனோஜ்குமாரின் தன்னம்பிக்கை அதிகரித்தது. அடுத்தகட்டமாக, 'சஹாய் ஸ்பைனல் இஞ்சுரி ரிஹாப் சென்டர் நிர்வாகிகள் பயிற்சி அளிக்க 2016 சென்னையில் நடைபெற்ற மாநில மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் 100 மீ 200 மீ. ஓட்டத்தில் கலந்துகொண்டு இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றார். அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டியிலும் முதலிடம் பிடித்தார்.




இதையடுத்து, சர்வதேசப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலி மூலமாகத்தான் அதில் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதன்விலை ரூ 4.5 லட்சம். வாங்கும் திறன் இல்லாததால், போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இவருடைய நிலையை அறிந்து திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரீத்தி சீனிவாசன் போட்டித் தரத்தில் சக்கர நாற்காலியை வாங்கித் தந்திருக்கிறார். இதனையடுத்து, 2017-ல் ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் 100, 200 மீ, பந்தயங்களில் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை மனோஜ்குமார் வென்றுள்ளார்.



இது குறித்து மனோஜ்குமாரிடம் கேட்டபோது,  ”தந்தை சபாபதியும், தாய் ஜெயம்மாவும் கூலித் தொழிலாளர்கள். பள்ளிப் படிப்பைச் சொந்த ஊரில் முடித்துவிட்டு, உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், சேர்ந்தேன், படிப்பைப் பாதியில் கைவிட்டேன். குடும்பச் சூழல் காரணமாக வேலை தேடி கோவைக்கு வந்தேன். பலரும் வேலை கொடுக்க முன்வரவில்லை. பின்னர்`அனுக்கிரகா மாற்றுத்திறனாளிகன் இல்லத்தில் சேர்ந்தேன். இந்நிலையில் 2015ல், மாற்றுத் திறனாளி கன்னியப்பன் என்பவர் சரவணம் பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடப்பதாகவும். ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்தத் தகவல்தான் எனது வாழ்க்கையை புரட்டிப் போட்டது" 


சமீபத்தில் வட ஆப்ரிக்காவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் , "முதலிடம் பிடித்த வீரரைவிட ஒரு விநாடி மட்டுமே பின்தங்கியிருந்தேன். முதல் சர்வதேச போட்டி என்பதால் ஏற்பட்ட பதற்றத்தால் முதலிடத்தை இழக்க நேரிட்டது. 100 மீ . ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறேன். உலக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற போகிறது. அதற்காக தற்போது தீவிரப் பயிற்சி மேற்க்கொண்டு வருகிறேன். அதில் நிச்சயம் பதக்கம் வெல்வேன். பயிற்சியாளரும் இயன்முறை மருத்துவருமான பழனிசாமி எனக்கு பயிற்சி அளித்து ருகிறார். மேலும்,  என்னைப் போன்று தமிழகத்தில் நிறைய பேர் உதவி கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இது போன்று போட்டிகளில் கலந்துகொண்டால் அவர்களின் அரசு நிவாரணம், உதவித் தொகை வழங்கி வருகிறது. என்னைப்போன்ற ஒருவருக்கு பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் வேலையை கூட அரசு வழங்கி உள்ளது. இதேபோன்று, எங்களுக்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என்றார் வேதனையுடன்.



தற்போது தனியார் நிறுவனமொன்றில் இயந்திரப் பராமரிப்பாளராக வேலை செய்து வரும் இவர், ஏழ்மையில் வாடும் தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்.