பழனியில் கோலாகலமாக நடந்த பங்குனி உத்திர தேரோட்ட விழா... பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு

பழனி பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

Continues below advertisement

தமிழ் கடவுள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் வணங்கப்படுபவர் முருகன். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக இருப்பது பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் முருக பெருமானிற்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி, மற்றும் வைகாசி விசாகம், சஷ்டி விரதம், தைப்பூசம், உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

Continues below advertisement


அவ்வாறு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும் காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். தைப்பூசம் அன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். அதேபோல் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகங்கள் கண்டால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முகக் கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களை பாடினால் சிறப்பு. 


இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின்போது பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். இவ்வாறு சிறப்புகள் வாய்ந்த பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துகுமாரசுவாமி ,வள்ளி,தெய்வானை திருக்கல்யாணமும்,  திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்றும் நடைபெற்றது. முன்னதாக தமிழகம் முழுவதிலிருந்தும் பாதயாத்திரை ஆக தீர்த்த காவடிகளை எடுத்து வந்த பக்தர்கள் பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர் .


இன்று மாலை 4.30 மணிக்கு மேல் அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெய்வானையுடன், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பழனி அடிவாரம் வடக்குகிரிவீதியில் இருந்து நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுக்க, அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக‌ தேரில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  தேரோட்டத்தில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் தலைவர் சுப்ரமணியன் ,அறங்காவலர் குழுவினர்,திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வருகின்ற 14ஆம் தேதி கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது. பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola