திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் மார்ச் 20-ம் தேதி ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது. இந்த ரோப்கார் செயல்பாட்டுக்காக அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவில் பகுதியில் ரோப்கார் நிலையம் உள்ளது. ரோப்காரில் பயணிக்க, காத்திருந்து செல்பவர்களுக்கு 15 ரூபாயும், முன்னுரிமை அடிப்படையில் செல்பவர்களுக்கு 50 ரூபாயும் என இருமுறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் வசதியை தேர்வு செய்கிறார்கள். ஆகையால் மாதாந்திரம், வருடாந்திரம் என ரோப்கார் சேவை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் மார்ச் 20, 2026 அன்று ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. இந்த இடைவெளியில் ரோப் காரில் உள்ள சாப்ட்டுகள், பெட்டிகள், கம்பி வடம் மற்றும் உருளைகள் உள்ளிட்ட முக்கியப் பாகங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த பின்னர், மறுநாள் முதல் ரோப் கார் சேவை மீண்டும் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்தைத் தவிர்க்க மின் இழுவை ரயில், படிப்பாதை மற்றும் யானைப் பாதையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
