பழனியில் நடைபெறவிருக்கிற உலக முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகவும், மாநாட்டிற்கான செலவுகள் அனைத்தும் உபயதாரர்கள் மற்றும் அரசு நிதியில் செய்யப்படுவதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அடுத்த மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டிற்கு ஏராளமான முருக பக்தர்கள், ஆதினங்கள் மற்றும் மடாதிபதிகள், தமிழ் அறிஞர்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. திருக்கோவிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழனிக்கு வருகை தந்தார். அதிகாலையில் பழனி மலை கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு, மாநாட்டிற்கு செய்யப்படும் ஏற்பாடுகள் மற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, பழனியில் நடைபெறவுள்ள அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகவும், மாநாட்டிற்கான செலவுகள் அனைத்தும் உபயதாரர்கள் மற்றும் அரசு நிதியில் செய்யப்படுவதாகவும்,
மாநாட்டில் பிரதானமாக எட்டு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு அதில் அறுபடை வீடு முருகன் மற்றும் மருதமலை முருகனின் பெருமைகளை விளக்கும் வகையில் சிறப்பு அலங்கார வளைவுகள், முருகனின் பெருமைகளை விளக்கும் வகையில் திரையரங்கு, வி.ஆர் தொழில்நுட்பத் திரையரங்கு, அறுபடை வீடுகளின் முருகன் திருக்கோவில்களின் தத்ரூபமாக அமைக்கப்பட்ட முருகன் சிலைகள், 12 சித்தர் சிலைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. ஐந்தாயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மாநாட்டு பந்தல் உணவு பந்தல் கழிப்பார்கள் ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக பிரசாதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டின் போது உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும், மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது குறித்து அவரிடம் கேட்டு முடிவு செய்யப்படும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பழனி திருக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, காவல்துறை மாவட்ட எஸ்பி பிரதீப் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.